ஒரு வருட சிறைத் தண்டனை முடிகிறது.. விடுதலையாகிறார் நவ்ஜோத் சிங் சித்து!
Mar 31, 2023,01:58 PM IST
டெல்லி: கொலை வழக்கில் ஒரு வருட கால கடுங்காவல் தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து நாளை விடுதலையாகிறார்.
1988ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி பாட்டியாலாவில் ஒரு கார் பார்க்கிங்கில் நடந்த மோதலின்போது 65 வயதான குர்னாம் சிங் என்பவரை தலையில் அடித்து விட்டார் சித்து. இதில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் சித்து, அவரது நண்பர் ருபிந்தர் சிங் சந்து ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சித்துவுக்கு ஒரு வருட கடுங்காவல் தண்டனயை உறுதி செய்து கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சித்து கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவரது நடத்தை சரியாக இருந்ததால் அவர் தற்போது விடுதலை செய்யப்படவுள்ளார். நாளை அவர் விடுதலையாகவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து சித்துவின் டிவிட்டர் கணக்கிலிருந்து ஒரு டிவீட் வெளியாகியுள்ளது. அவரது வக்கீல் எச்பிஎஸ் வர்மாவும் இதை உறுதி செய்துள்ளார்.