23 வருஷத்தைத் தாண்டிய நவீன் பட்நாயக்.. இந்தியாவின் 2 வது நீண்ட கால முதல்வர்!

Su.tha Arivalagan
Jul 23, 2023,04:35 PM IST

புவனேஸ்வர்: ஒடிஷா முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக், இந்தியாவின் 2வது நீண்ட கால முதல்வர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். கடந்த 23 வருடங்களாக அவர் முதல்வர் பதவியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் மிகச் சிறந்த முதல்வர்களில் நவீன் பட்நாயக்கும் முக்கிய இடத்தில் இருக்கிறார். ஒடிஷா மாநில முதல்வராக ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வரும் நவீன் பட்நாயக்,  தனது பதவிக்காலத்தில் 23 ஆண்டுகள் 139 நாட்களை முடித்துள்ளார். இதன் மூலம் இதுவரை நீண்ட காலம் முதல்வராக இருந்த முதல்வர்களில் 2வது இடத்தில் இருந்த மறைந்த மேற்கு வங்காள முதல்வர் ஜோதிபாசுவின் சாதனையை முறியடித்துள்ளார் நவீன் பட்நாயக்.




ஜோதிபாசு 23 ஆண்டுகள் 137 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்தவர். முதலிடத்தில் பவன் குமார் சாம்லிங் இருக்கிறார்.  சிக்கிம்  முதல்வராக இருந்த பவன் குமார் சாம்லிங் 25 வருடங்களுக்கும் மேலாக முதல்வர் பதவியில் நீடித்து, இந்தியாவிலேயே நீண்டகாலம் முதல்வர் பதவியில் இருந்து சாதனை படைத்தவர்.  அந்த சாதனையை நவீன் பட்நாயக் முறியடிப்பார் என்று நம்பப்படுகிறது.


கடந்த 2000மாவது ஆண்டு மார்ச் 5ம் தேதி ஒடிஷா மாநில முதல்வராக பதவியேற்றார் நவீன் பட்நாயக். அன்று முதல் அவர்தான் முதல்வராக இருந்து வருகிறார். மறைந்த தலைவர் பிஜூ பட்நாயக்கின் புதல்வர்தான் நவீன் பட்நாயக். பிஜூ பட்நாயக் மீது வைத்திருந்த அதே அன்பையும், நம்பிக்கையையும் நவீன் பட்நாயக் மீதும் ஒடிஷா மக்கள் வைத்திருப்பதே அவர் இத்தனை காலமாக முதல்வர் பதவியில் நீடித்திருக்க முக்கியக் காரணம்.


டிவிட்டரை என்ன செய்யப் போகிறார் எலான் மஸ்க்.. குண்டைப் போட்ட டிவீட்!


அரசியலில் தெளிவான நடை போடுபவர் நவீன் பட்நாயக். தேவையில்லாத அரசியல் செய்வதில்லை. சிறுபிள்ளைத்தனமாக பேசுவதில்லை. முதிர்ச்சியான ஒரு தலைவராக எப்போதும் செயல்படுவதில் நவீன் பட்நாயக்குக்கு இணை அவர்தான். நல்லநிர்வாகி. தெளிவான அரசாட்சியைக் கொடுத்து வருகிறார். மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் வைத்துள்ளார். எதிர்க்கட்சிகள் மற்றும் மத்தியில் உள்ள ஆளும் கட்சி ஆகிய இருவருடனும் சமமான தொலைவை கடைப்பிடிப்பவர், இருவரின் நன்மதிப்பையும் பெற்றவரும் கூட.


தந்தை பிஜூ பட்நாயக் இறந்த பின்னர் 1997ம் ஆண்டு அரசியலுக்கு வந்தார் நவீன் பட்நாயக். அப்போது அவர் ஜனதாதளத்தில்தான் இருந்தார். பின்னர் தனது தந்தை பெயரில் பிஜூ ஜனதாதளத்தை 1997ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தொடங்கினார் நவீன் பட்நாயக். முதல்வர் பதவிக்கு வருவதற்கு முன்பு 2 வருடம் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார் நவீன் பட்நாயக்.  மேலும் 1997ம் ஆண்டு முதல் 2000மாவது ஆண்டு வரை அவர் அஸ்கா தொகுதியிலிருந்து லோக்சபாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பியாக இருந்துள்ளார்.


76 வயதாகும் நவீன் பட்நாயக் திருமணமே செய்து கொள்ளவில்லை. பெண்களின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும், கல்விக்கும், அவர்களின் சமூக அந்தஸ்துக்கும் தொடர்ந்து  குரலும், ஊக்கமும் கொடுத்து வருபவர் நவீன் பட்நாயக் என்பது குறிப்பிடத்தக்கது.