சகிப்புத்தன்மை, அமைதி, மதச்சார்பின்மையைப் பின்பற்றுவதே.. மகாத்மாவைப் போற்ற சரியான வழி!

Manjula Devi
Jan 30, 2024,03:32 PM IST

புதுடெல்லி: தேசப் பிதா மகாத்மா காந்தியின் 77 வது நினைவு  தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் இந்திய குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


தமிழ்நாட்டிலும் பல்வேறு கட்சித் தலைவர்கள் காந்தியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


காந்தி மகான் பிறந்த புண்ணிய பூமி இது.. என்று சொல்லும் அளவுக்கு இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர் நமது தேசப்பிதா அன்னல் மகாத்மா காந்தியடிகள். எத்தனையோ தலைவர்கள் நம் இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டுள்ளனர். அதில் மகாத்மா காந்தியடிகள் இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து அகிம்சை வழியில் போராட்டம் நடத்தியவர். "அகிம்சை, அமைதி, மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை"இவைதான் மகாத்மா காட்டிய வழி.




இந்த அமைதி வழிதான் நமக்கு சுதந்திரம் கிடைக்க வழி வகுத்தது. காந்தி காட்டிய வழியில் தேசம் போனதால்தான் சுதந்திரம் நமக்குக் கைவசமானது.  இந்திய மக்களில் பலரும் போதிய உடைகள் இன்றி இருக்கிறார்கள். நான் மட்டும் நல்ல உடை அணிவதா என்று தனது ஆடம்பர உடையை தூர எறிந்து கோவணக் கோலத்திற்கு மாற்றி,  மிகவும் எளிமையாக வாழ்ந்த உயர்ந்த மனிதர் மகாத்மா. 


இது மட்டும் அல்லாமல் தனக்குத் துன்பம் இழைத்தவர்களுக்கும் தீங்கு செய்யக்கூடாது. அவர்களை மன்னிக்க வேண்டும் ..எப்போதும் உண்மையை பேசுவதே சிறந்தது.. எல்லோருக்கும் சம உரிமை வழங்க வேண்டும் .. என்று பல உயர்ந்த கொள்கைகளையும், நற் பண்புகளையும் தன்னகத்தே கொண்டவர். 


1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி, டெல்லியில் உள்ள பிர்லா மந்திரில், நாதுராம் கோட்சேவால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் மகாத்மா காந்தி. சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் அரசியல் படுகொலை இதுதான். இன்று காந்தியின் 77 வது நினைவு தினம். காந்தியடிகளின் நினைவுகளை போற்றும் விதமாக இன்று  இந்தியா முழுவதும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டது.


டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியடிகள் நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.


தமிழ்நாட்டிலும் காந்தியடிகளின் உருவப் படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களிலும் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மகாத்மா காந்தியின் நினைவு நாளை மதநல்லிணக்க நாளாக கொண்டாட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனை கடைபிடிக்கும் விதமாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக தலைமை அலுவலகத்தில் மத நல்லிணக்க  உறுதிமொழியை ஏற்றனர்.