மக்கள் வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்துள்ளார்கள் : ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

Aadmika
Jun 09, 2024,10:28 PM IST

சென்னை : பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டில்லி புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், மக்கள் இந்த முறை மத்தியில் வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


நாட்டின் 16வது பிரதமராக நரேந்திர மோடி இன்று இரவு பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் வங்கதேச பிரதமர், நேபாள பிரதமர் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளார். உள்நாட்டில், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் கவுகான் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். மொத்தம் 2000 முதல் 3000 பேர் வரை இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.




பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றுள்ளார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேட்டி அளித்தார்.


ரஜினிகாந்த் கூறுகையில், நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார். இது மிகப் பெரிய சாதனை. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மக்கள் இந்த முறை பார்லிமென்ட் தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்துள்ளார்கள். இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்க வழிவகுக்கும். 


பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா மட்டுமல்ல, ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவிற்கும் எனக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அந்த விழாவில் நான் கலந்து கொள்ள செல்வதா, இல்லையா என்பதை நான் பிறகு தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.