நரேந்திர மோடி வெற்றிகரமான பிரதமர்.. வைப்ரன்ட் குஜராத் மாநாட்டில்.. முகேஷ் அம்பானி புகழாரம்
அகமதாபாத்: நரந்திர மோடி தான் இந்திய வரலாற்றில் வெற்றிகரமான பிரதமர் என ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி புகழாரம் சூட்டியுள்ளார்.
துடிப்பான குஜராத் (Vibrant Gujarat) என்னும் தலைப்பில் 10 வது உச்சி மாநாடு காந்திநகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாடு 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 100 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. சர்வதேச நிறுவனங்களின் பார்வையை குஜராத் நோக்கி ஈர்க்கும் வகையில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முகேஷ் அம்பானி பேசுகையில்,
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் பசுமை எரிபொருளை தயாரிக்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. வரும் காலாண்டுக்குள் திருபாய் அம்பானி க்ரீன் எனர்ஜி கிகா காம்ப்ளக்ஸ் ஜாம்நகரில் 5000 ஏக்கர் அளவில் அமைக்கப்பட்ட உள்ளது. அதில் பசுமை எரிபொருள் தயாரிக்கப்படும். இதன் மூலம் பசுமை ஆற்றலை ஏற்றுமதி செய்வதில் இந்தியா சிறந்து விளங்கும்.
இந்தியாவில் முதல் முறையாக கார்பன் ஃபைபர் வாயிலாக 5ஜி சேவையை ஹசிராவில் நிறுவ ரிலையன்ஸ் திட்டமிட்டிருக்கிறது. இதனால் 5ஜி மற்றும் ஏஐ தொழில்நுட்ப சார்ந்த பல வேலைகள் வாய்ப்புகளின் மையமாக குஜராத் திகழும்.
கடந்த 10 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் 12 லட்சம் கோடி தொழில் முதலீடு செய்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு குஜராத்தில் தான் செய்யப்பட்டுள்ளது. எனவே ரிலையன்ஸ் நிறுவனம் எப்போதும் குஜராத்தின் சொத்து.
வரும் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா 35 ட்ரிலியன் டாலர் பொருளாதாரத்தை எட்டிப்பிடிக்கும். அனைத்து உலக நாடுகளும் இந்திய பிரதமர் மோடியின் அசைவுகளை உற்று நோக்குகிறது. இந்திய வரலாற்றிலேயே வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடி தான்.
உலக அளவில் மிகச்சிறந்த தலைவராக மோடி பார்க்கப்படுவதால் குஜராத்தில் முதலீடு குவிக்கிறது. நமது பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வை கொண்டவர். குஜராத் மாற்றம் பெற முக்கிய காரணமாக இருந்தது பிரதமர் மோடி தான் என்று கூறியுள்ளார் முகேஷ் அம்பானி.