அனல் பறந்த மோடி வீட்டு டீ பார்ட்டி.. மீண்டும் மத்திய அமைச்சராகும் எல் முருகன்.. நிர்மலா சீதாராமனும்!

Su.tha Arivalagan
Jun 09, 2024,02:18 PM IST

டெல்லி: பிரதமராக இன்று இரவு 3வது முறையாக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி இன்று தனது இல்லத்தில் டீ பார்ட்டி ஒன்றை வைத்தார். அதில் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளவர்கள் கலந்து கொண்டதாக கூறப்பட்டதால், யாரெல்லாம் வந்தார்கள் என்று பலரும் ஆர்வத்துடன் வந்தவர்களை லிஸ்ட் எடுத்தனர்.


நரேந்திர மோடியின் 7, லோக் கல்யாண் மார்க் வீட்டில் இந்த தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு தலைவர்கள் பலரும் வந்து குவிந்துள்ளனர். அமைச்சர்களாகப் போகிறவர்களைக் கெளரவிக்கும் வகையில் இந்த தேநீர் விருந்துக்கு பிரதமர் ஏற்பாடுசெய்திருந்ததாக கூறப்படுவதால், இதில் கலந்து கொண்டவர்கள்தான் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்கப் போகிறார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




பிரதமர் இல்ல தேநீர் விருந்துக்கு வந்தவர்கள் பட்டியல்:


ஜே.பி. நட்டா, கிரன் ரிஜிஜு, ஜோதிராதித்யா சிந்தியா, மனோகர் லால் கட்டார், சிவராஜ் சிங் செளகான், அமித் ஷா, ராஜ்நாத் சிங்,  எல். முருகன், நிர்மலா சீதாராமன், சர்பானந்தா சோனோவால், கிஷன் ரெட்டி, பண்டி சஞ்சய், பியூஷ் கோயல், ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான், ஜெயந்த் சிங் செளத்ரி, சிராக் பாஸ்வான், ராம்தாஸ் அத்வாலே, ரக்ஷா கட்சே, நித்தியானந்த் ராய், ஹர்ஷ் மல்ஹோத்ரா, பாகிரத் செளத்ரி, எச். டி.குமாரசாமி, ஜிதின் பிரசாதா,  ரவ்நீத் சிங் பிட்டு, நிதின் கத்காரி, ராஜீவ் ரஞ்சன் சிங், ஜித்தன் ராம் மஞ்சி, பிரதாப் ராவ் ஜாதவ், பிரஹலாத் ஜோஷி, ஷோபா கரன்ட்லஜே, பி.எல். வர்மா, கிரிராஜ் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இவர்கள் அனைவருமே அமைச்சர்களாகப் போகிறார்களா அல்லது அதில் யாராவது விடுபட வாய்ப்புள்ளதா என்பது இன்று இரவு தெரிந்து விடும். இருப்பினும் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் சிலர் இதில் கலந்து கொள்ளவில்லை. எனவே இதில் கலந்து கொள்ளாத வேறு சிலரும் கூட இன்றைய அமைச்சரவை பதவியேற்பில் இடம்பெறக் கூடும் என்பதால் இதை முழுமையான பட்டியலாக கருத முடியுமா என்று தெரியவில்லை.


மீண்டும் அமைச்சராகும் எல் முருகன்




எல் முருகன் கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அவர் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சிட்டிங் எம்.பியான திமுகவின் ராசா போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டார். இந்த தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் எல் முருகன் ராஜ்யசபா எம்.பியாக மீண்டும் வெற்றி பெற்றிருந்தார். எனவே தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ள எல் முருகன் மீண்டும் மத்திய அமைச்சராகிறார். இதனால் எல் முருகன் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


அதேசமயம், இன்றைய டீ பார்ட்டியில் தமிழ்நாட்டிலிருந்து அண்ணாமலையோ அல்லது வேறு யாருமோ கலந்து கொள்ளவில்லை . எனவே தமிழ்நாட்டிலிருந்து யாரெல்லாம் மத்திய அமைச்சராகப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.