படி படி படி.. அதுதான் ஒரே ஆயுதம்.. 469 மார்க் வாங்கி அசத்திய நாங்குநேரி சின்னதுரை!

Su.tha Arivalagan
May 06, 2024,06:23 PM IST

நாங்குநேரி: ஜாதிய வன்கொடுமைக்குள்ளாகி, கொடூர கொலை வெறித் தாக்குதலுக்குள்ளான நாங்குநேரி மாணவர் சின்னதுரை பிளஸ்டூவில் 469 மதிப்பெண்கள் வாங்கி அசத்தியுள்ளார். தான் சிஏ படிக்க ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


சின்னதுரையை யாராலும் அத்தனை சீக்கிரம் மறந்து விட முடியாது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜாதி வெறி பிடித்த சக மாணவர்களால் கொடூரமாக சரமாரி தாக்குதலுக்குள்ளானவர்தான் சின்னதுரை. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த சின்னதுரை ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார். ஆயினும் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.




மருத்துவமனையில் இருந்தபடியே காலாண்டுத் தேர்வையும் எழுதினார் சின்னதுரை. தமிழ்நாட்டையே அதிர வைத்த சம்பவம் சின்னதுரை மீதான சாதிய வன்முறைத் தாக்குதல். இந்த நிலையில் சின்னதுரை பிளஸ்டூவில் சூப்பராக பாஸாகியுள்ளார். 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார் சின்னதுரை. தமிழ் 71, ஆங்கிலம் 93, எக்கனாமிக்ஸ் 42, வணிகவியல் 84, கணக்குப்பதிவியல் 85, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் 94 என அசத்தலான மதிப்பெண் வாங்கியுள்ளார் சின்னதுரை.


தனது சாதனை குறித்து சின்னதுரை கூறுகையில், சாதிய வன்முறைத் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். 

4 மாசமா சிகிச்சை பெற்றேன். அப்போதே மருத்துவமனையில் இருந்தபடி படித்தேன். சார் வந்து சொல்லிக் கொடுத்தாங்க. பிறகு திரும்பவும் ஸ்கூலுக்குப் போனப்போ, அங்கும் நல்லா சொல்லிக் கொடுத்தாங்க. நண்பர்கள் சப்போர்ட் பண்ணாங்க. நல்ல மார்க் வாங்கிருக்கேன். சந்தோஷமாக இருக்கு.  நான் பிகாம் படிச்சு பிறகு சிஏ படிக்க ஆசைப்படறேன் என்று கூறியுள்ளார் சின்னதுரை.


கல்வி மட்டுமே நமது ஒரே ஆயுதமாக இருக்க வேண்டும்.. அடிக்க வேண்டும் என்றாலும் பதிலடி தர வேண்டும் என்றாலும் அந்தக் கல்வி மட்டுமே பேராயுதமாக இருக்க வேண்டும். அதை மட்டும்தான் யாராலும் வீழ்த்த முடியாது. அதை சின்னதுரை நிரூபித்துள்ளார். இன்னும் நிறைய படித்து, வாழ்க்கையில் உயர்ந்து  பலருக்கும் மிகச் சிறந்த முன்னுதாரணமாக சின்னதுரை திகழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை.. அதை அவரது கல்வித் தாகமே நிரூபித்தள்ளது.


வாழ்த்துகள் சின்னதுரை!