நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன்.. தாம்பரம் போலீஸ் அனுப்பியது.. மே 2ல் ஆஜராகிறார்!

Manjula Devi
Apr 25, 2024,05:57 PM IST

நெல்லை:  4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியது தாம்பரம் போலீஸ். இதனைத் தொடர்ந்து மே 2 ல்  ஆஜராக உள்ளார் நயினார் நாகேந்திரன்.


கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டவர் நயினார் நாகேந்திரன். இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சென்னை தாம்பரம் டூ நெல்லை எக்ஸ்பிரஸில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு எவ்வித ஆவணங்களும் இன்றி ரொக்கமாக 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 




இது தொடர்பாக சதீஸ், நவீன், பெருமாள், ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.பின்னர் இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது நயினார் நாகேந்திரனுக்காக பண பட்டுவாடா செய்ய இவருடைய உறவினர்கள் முருகன், ஆசைத்தம்பி, ஜெயசங்கர், ஆகியோர் 4 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தை நெல்லைக்கு கொண்டு செல்ல சொன்னதாக வாக்குமூலம் அளித்தனர். 


இதனை அடுத்து நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் மூவரும் நேரில் ஆஜராகும் படி தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியது. ஆனால் இவர்கள் ஆஜராகவில்லை. அப்போது ஆஜராக பத்து நாட்கள் கால அவகாசம் கேட்டிருந்தனர். 


இந்த நிலையில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் இன்று இரண்டாவது முறையாக  சம்மன் வழங்கினர். இதையடுத்து நயினார் நாகேந்திரன் வரும்  மே இரண்டாம் தேதி போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க இருக்கிறார்.