ஹாயாக.. இலங்கை புறப்பட்ட பயணிகள் கப்பல்.. இனி நாகை டூ இலங்கை பயணம் ஈஸி

Su.tha Arivalagan
Oct 14, 2023,03:48 PM IST

நாகப்பட்டினம்: தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று தொடங்கியது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கியது .பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார்.


பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க விழா நாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது .இதில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வேலு ஆகியோர் பங்கேற்று கொடியசைத்து கப்பல் சேவையை தொடங்கி வைத்தனர். பின்னர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார் . அதில் ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மூன்று மொழிகளில் தனது வணக்கங்களை கூறி பேசினார்.




இந்தக் கப்பல் நாகையில் இருந்து புறப்பட்டு இலங்கை  காங்கேசன் துறைமுகத்திற்கு சென்றடைய 60 மைக்கல் தொலைவு உள்ளது .இந்த கப்பல் சென்றடைய  3.30 மணி நேரம்  ஆகும். இந்த கப்பல் போக்குவரத்து தினமும் இலங்கையிலிருந்து நாகைக்கும், நாகையிலிருந்து இலங்கைக்கும்  தலா ஒரு முறை இயக்கப்படும்.  பயணிகள் கப்பல் போக்குவரத்து தினமும் காலை 7 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு  சென்றடையும். பின்னர் அங்கிருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணி அளவில் நாகையை வந்தடையும்.


இலங்கையிலிருந்து நாகைக்கும், நாகையிலிருந்து இலங்கைக்கும் பயணிகள் கப்பல் போக்குவரத்து கட்டணம் ஜிஎஸ்டி உட்பட ரூபாய் 7,670ஆக நிர்ணயித்துள்ளனர். கப்பலில் பயணம் செய்பவர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் வரிச்சலுகையாக ரூபாய் 3000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 150 பயணிகள் செல்லுமாறு இந்த பயணிகள் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 50 பேர்  இன்று இலங்கைக்கு பயணம் செய்தனர்.