மைக் சின்னம் வேண்டாம்.. படகு அல்லது பாய்மரப் படகு கொடுங்க..  நாம் தமிழர் கட்சி சீமான் கோரிக்கை

Meenakshi
Mar 25, 2024,04:50 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், படகு அல்லது பாய்மர படகு சின்னம் கேட்டு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 40 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக மற்றும் பாஜக  தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டது. அடுத்த கட்டமாக தேர்தல் பிரச்சாரம் ஜோராக தொடங்கியுள்ளது. இன்று வேட்பாளர்கள் வேட்புமனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர்.


இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக கட்சிகள் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வரும் வேலையில், நாம் தமிழர் கட்சியின் சின்னம் பிரச்சனை காரணமாக தேர்தல் குறித்து எந்த வேலைகளையும் செய்யாமல் இருந்து வந்தது. கடந்த 23ம் தேதி நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்  40 தொகுதி  வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிவித்தார் சீமான். 




நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தரும் ஒரே கட்சியாக உள்ளது. அந்த வகையில் தேர்தல்களில் 50 சதவீத பெண்களுக்கு வாய்ப்பளிப்பார் சீமான். அந்த வகையில் லோக்சபா தேர்தலிலும் 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார் சீமான். ஒரே மேடையில் அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்த சீமான் மார்ச் 26ம் தேதி தனது கட்சியின் சின்னத்தையும் அறிமுகம் செய்துவிட்டு மார்ச் 27ம் தேதி தனது பிரச்சாரத்தையும் தொடங்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், இன்று நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் வேண்டாம். படகு அல்லது பாய்மர படகு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் சீமான் கோரிக்கை வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று இன்று மாலை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சின்னம் முடிவாகிய பின்னர் தான் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.