டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்த வழக்கில்.. சீமானுக்கு கெடு விதித்த.. திருச்சி குற்றவியல் நீதிமன்றம்!
திருச்சி: தன்னுடைய குடும்பத்தினரை சீமான் அவதூறாக பேசியதாக டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்த வழக்கில், இன்று மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என என மாவட்ட நீதிபதி பாலாஜி எச்சரித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னையும், தன் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக டிஐஜி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்ற சீமான், நஷ்ட ஈடு தரவேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிப்ரவரி மாதம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஆனால் சீமான் இதுவரை ஆஜராகவில்லை.
இந்த நிலையில் டிஐஜி வருண் தாக்கல் செய்த அவதூறு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாலாஜி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராக வேண்டும். ஆஜராகாவிட்டால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதனால் சீமான் ஆஜராகுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.