தமிழ் தேசிய அரசியலின் முதல் அங்கீகாரம்.. நாம் தமிழர் கட்சியும், சீமானும் சாதித்தது எப்படி?
சென்னை: எம்ஜிஆருக்கும், சிவாஜி கணேசனுக்கும் நடுவே ஜெமினி கணேசன் புகுந்து ஒரு காட்டுக் காட்டியது போல, திராவிட மற்றும் வலது சாரி அரசியலுக்கு மத்தியில் புகுந்த புதிய புயலாக நாம் தமிழர் கட்சி இன்று, தமிழ் தேசிய அரசியலுக்குப் புதிய அங்கீகாரம் பெற்றுக் கொடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்ற முதல் தமிழ் தேசிய அரசியல் கட்சி நாம் தமிழர்தான்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவைத் தாண்டி யாரும் வர முடியாது, வளர முடியாது என்ற நிலைப்பாடு நீண்ட காலமாகவே உள்ளது. இது ஒரு வகையில் உண்மையும் கூட. காரணம் மக்களின் மனதில் இந்த இரு கட்சிகளும் அதன் தலைவர்களும் ஏற்படுத்தி வைத்துள்ள தாக்கம் அத்தனை சீக்கிரம் நீர்த்துப் போய் விட முடியாதது. இந்த இரு கட்சிகளும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியலை ஆக்கிரமித்துள்ளன. ஆட்சி புரிந்தும் வருகின்றன. தமிழ்நாட்டின் பொருளாதார, சமூக, சமுதாய வளர்ச்சிக்கு இந்த இரு கட்சிகளும் செய்த பங்கும் மிகப் பெரியது.
தமிழ்நாட்டுக்குப் புதிய அரசியல் களம்
இப்படி திராவிடக் கட்சிகளின் ஆதிக்கமும், அவர்களின் ஆளுமையும் வியாபித்துக் கிடந்த நிலையில்தான் புதிய அரசியல் சக்தியாக, தமிழ் தேசிய அரசியலை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி களத்தில் இறங்கினார் சீமான். அவரது வருகையை ஆரம்பத்தில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவரது பேச்சுத் திறமையும், அவர் பேசிய விஷயங்களும் இளைஞர்களை அவர் பக்கம் ஈர்க்க ஆரம்பித்தது.
விடாமல் தொண்டை வலிக்க வலிக்க அவர் கத்திக் கத்திப் பேசிய பேச்சுக்களும், அவர் தொட்ட டாப்பிக்குகளும் அவர் பக்கம் ஒரு கூட்டத்தைச் சேர்க்க ஆரம்பித்தது. நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும், இதுதான் எங்களது கொள்கை, 50 சதவீத தொகுதிகள் பெண்களுக்கு என அவர் அதிரடி காட்ட ஆரம்பித்த விதமும் அவர் பால் இளைஞர் சமுதாயத்தை திரும்ப வழி வகுத்தது. ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லிச் சொல்லி நாம் தமிழர் கட்சி தோற்றாலும் கூட சற்றும் சளைக்காமல் அடுத்தடுத்த களங்களை நோக்கி சீமான் பாய்ந்து வந்தது அவரது கட்சி மீதான ஈர்ப்பை மேலும் அதிகரிக்கவே செய்தது.
தோல்விக்கு மத்தியிலும் வளர்ந்த ஆச்சரியம்
2016ம் ஆண்டு முதல் தேர்தல் அரசியலில் இருந்து வருகிறது நாம் தமிழர் கட்சி. இதுவரை இரட்டை மெழுகுவர்த்தி, கரும்பு விவசாயி மற்றும் மைக் ஆகிய மூன்று சின்னங்களில் போட்டியிட்டுள்ளது. ஒரு தேர்தல் வெற்றியைக் கூட இக்கட்சி சுவைத்தது கிடையாது. அதாவது சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெற்றி பெற்றது இல்லை. சீமானே கூட தேர்தலில் தோல்வியைத் தழுவியதையும் தமிழ்நாடு பார்த்தது. ஆனாலும் சளைக்காமல் இக்கட்சி தொடர்ந்து வளர்ந்து வருவது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது. இங்குதான் சீமான் என்ற ஒற்றை தலைவரின் விடா முயற்சியும், கடும் உழைப்பையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
ஒரு தலைவன் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்றால், அவனிடம் திடமான கொள்கை இருக்க வேண்டும். தீர்க்கமான பார்வை இருக்க வேண்டும். வசீகரமான பேச்சு இருக்க வேண்டும், வழிநடத்தக் கூடிய ஆற்றல் இருக்க வேண்டும். கட்டுக்கோப்பு இருக்க வேண்டும். இவை எல்லாம் இருந்ததால்தான் பலரால் வெற்றி பெற முடிந்தது. வெறும் வசீகரத்தை மட்டும் வெல்ல முடியாது என்பதற்கு பல உதாரணங்களைக் காட்டலாம்.. அந்த வகையில் சீமானிடம் பேச்சு வசீகரம் மட்டும் இல்லாமல் மற்ற அம்சங்களும் நிறையவே இருப்பதால்தான் அவரால் பல விமர்சனங்கள், எதிர்ப்புகளையும் தாண்டி கட்சியை ஒரு அங்கீகாரத்திற்குக் கொண்டு வந்து நிறுத்த முடிந்திருக்கிறது. இது நிச்சயம் பெரிய சாதனைதான்.
மலைக்க வைக்கும் வாக்குகள்
நாம் தமிழர் கட்சிக்கு ஆரம்பத்தில் கிடைத்த வாக்கு சதவீதம் 1.10 சதவீதம். இதுவே பெரிய ஆச்சரியம்தான். அடுத்தடுத்து அதன் வாக்கு சதவீதம் கூடிக் கொண்டேதான் போயுள்ளதே தவிர குறையவில்லை என்பது இன்னொரு ஆச்சரியம். சில லட்சங்கள் என்ற அளவில் கிடைத்து வந்த வாக்குகள் பல லட்சங்களாக மாறியபோதுதான் நாம் தமிழர் கட்சியைப் பார்த்து மற்ற கட்சிகள் சற்று யோசிக்க ஆரம்பித்தன.
2024 லோக்சபா தேர்தலில் வழக்கம் போல 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் தனித்துப் போட்டியிட்டது நாம் தமிழர் கட்சி. இதில் முதல் முறையாக புதிய சின்னத்திலும் அது போட்டியிட்டது. மைக் சின்னம் கடைசி நேரத்தில்தான் கிடைத்தது. ஆனாலும் அதுவரை இல்லாத அளவுக்கு வாக்குகளை இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வாரிக் குவித்ததை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மொத்தமாக 35 லட்சத்து 60 ஆயிரத்து 485 வாக்குகளைப் பெற்றது நாம் தமிழர் கட்சி. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 8.19 சதவீதமாகும். இதுதான் அக்கட்சியை இன்று மாநிலக் கட்சியாக அங்கீகரிக்க காரணமாக அமைந்தது. இது தமிழ்நாட்டில் கிடைத்த வாக்கு சதவீதம். புதுச்சேரியில் கிட்டத்தட்ட 5 சதவீத வாக்குகளை அந்தக் கட்சி அறுவடை செய்துள்ளது.
கொள்கை நிலைப்பாடு
சீமானின் பேச்சுக்களை பெரும்பாலும் பிரிவினைவாதப் பேச்சுக்களாகத்தான் அவருக்கு எதிரில் நிற்கும் அத்தனை கட்சிகளும் வர்ணிக்கின்றன. பிற மொழியாளர்களுக்கு எதிரான கட்சியாகவே அவரை சித்தரிக்கவும் செய்கின்றனர். இவற்றையெல்லாம் தாண்டித்தான் அவரும் தொடர்ந்து பேசுகிறார், அரசியல் செய்கிறார். தான் பிறமொழியாளர்களுக்கு எதிரானவன் இல்லை. என் மண் தமிழ்நாடு என் மக்கள் தமிழர்கள்.. அவர்களை ஆள வேண்டியது தமிழன் மட்டுமே என்பதே எனது கூற்று.. நான் இதை ஆந்திராவில் போய்க் கூறினேனா இல்லை வேறு மாநிலத்தில் கூறினேனா.. என் மண்ணைப் பற்றித்தானே பேசுகிறேன்.. இதில் என்ன தவறு இருக்கிறது என்று திரும்பக் கேட்கிறார்.
அவரது உரத்த குரலும், அதில் தெறித்து விழும் வார்த்தைகளும் பல நேரத்தில் சலசலப்பையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தினாலும் கூட தொடர்ந்து வளர்ந்து கொண்டுதான் வருகிறார். நாம் தமிழர் கட்சியும் வளர்ச்சி பெற்றே வருகிறது என்பதையே இந்த அங்கீகாரம் காட்டுகிறது. திருமாவளவன் எப்படி தனது விடாமுயற்சியாலும், தீர்க்கமான கொள்கையாலும் தனது கட்சிக்கு இன்று அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறாரோ அதேபோல சீமானும், நாம் தமிழர் கட்சியை அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாற்றியிருக்கிறார்.
முன்னே பின்னே இருந்தாலும் இந்த இரு தலைவர்களின் கொள்கை நிலைப்பாடுதான் அவர்களின் உயர்வுக்கு முக்கியக் காரணம்.. இது பல வளரும் தலைவர்களுக்கு, வளர நினைக்கும் தலைவர்களுக்கு நல்ல பாடமாகும்.. அவர்கள் இவர்களிடமிருந்து நிலைப்பாடுகளை எடுப்பது எப்படி, அதில் தைரியமாக நிற்பது எப்படி என்பது குறித்து நிறைய கற்றுக் கொள்ள இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்