கைக்கு வந்த "மைக்".. நச்சுன்னு மேடை போட்டு.. 40 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தும் சீமான்.. இன்று!

Manjula Devi
Mar 23, 2024,01:58 PM IST

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 40 தொகுதிக்குமான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஏற்றி அறிமுகப்படுத்தவுள்ளார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக மற்றும் அதிமுக  தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டது. அடுத்த கட்டமாக தேர்தல் பிரச்சாரம் ஜோராக தொடங்கியுள்ளது. பாஜகவும் தற்போது வேட்பாளர்களை அறிவித்து வேலையில் இறங்கி விட்டது. 




நாம் தமிழர் கட்சிதான் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கான  40 வேட்பாளர் பட்டியலை இன்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிவிக்க உள்ளார். இந்த வேட்பாளர் கூட்டம்  சென்னை பல்லாவரத்தில் நடைபெற உள்ளது.


ஏற்கனவே சீமான் தலைமையிலான கட்சிக்கு கரும்புச் சின்னம் மறுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில் 40 தொகுதிக்குமான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிவிக்க இருக்கிறார். நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தரும் ஒரே கட்சியாக உள்ளது. அந்த வகையில் தேர்தல்களில் 50 சதவீத பெண்களுக்கு வாய்ப்பளிப்பார் சீமான். அந்த வகையில் லோக்சபா தேர்தலிலும் 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தவுள்ளார் சீமான்.


தேர்தலில் சீமான் போட்டியிடுவாரா என்று தெரியவில்லை. ஆனால் மக்களிடையே நல்ல அறிமுகம் ஆன சிலர் எங்கு  போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகமாக உள்ளது.