"I love you..".. உரக்கச் சொன்ன இளைஞன்.. "Me too" சொன்ன சீமான்.. புதுச்சேரியில் கலகல!
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது படு சீரியஸாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசிக் கொண்டிருந்தபோது, அவரைப் பார்த்து ஐ லவ்யூ என்று ஒரு தொண்டர் உரக்கக் கூறினார். அதைக் கேட்ட சீமான், சிரித்தபடி "மீ டூ" என்று பதிலளிக்க அந்த இடம் கலகலப்பானது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் தனித்துப்போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி. 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறக்கியுள்ளார் சீமான். அனைத்துத் தொகுதிகளிலும் தனி ஆளாக பிரச்சாரமும் செய்து அசத்தியுள்ளார். தொண்டைத் தண்ணீர் வற்ற வற்ற ஆவேசமாக பேசியும் வருகிறார்.
இந்தநிலையில் புதுச்சேரியில் அவர் பிரச்சாரம் செய்தபோது இத்தனை வருடமாக உங்களுக்காக கத்திக் கொண்டிருக்கிறேன்.. ஆனால் எங்களை ரோட்டில்தானே நீங்கள் நிறுத்தி வருகிறீர்கள் என்று வாக்காளர்கள் குறித்து வருத்தத்துடன் பேசினார் சீமான். சீமான் பேச்சிலிருந்து சில துளிகள்:
அன்று தனியார்கள் சாராயம் காய்ச்சினார்கள். இருட்டில் ஊறல் போட்டு காய்ச்சுவான்.. நான் கூட சின்ன வயசுல போயிப் பார்த்திருக்கேன். அப்பெல்லாம் இது தெரியாது. அன்று சாராயம் காய்ச்சி வித்தவன்லாம் இன்று பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர்களாக உள்ளார்கள்.. பல்கலைக்கழகம் நடத்த வேண்டிய அரசு சாராயம் வித்துட்டு இருக்கு.. மக்கள் தொடர்ந்து அவர்களுக்கே ஓட்டுப் போட்டுட்டு இருக்கீங்க. எங்களைத் தூக்கி ரோட்டுல போட்டுட்டீங்க.
எனக்கு பேச்சே வரலை.. தேவர் மகன் படத்துல ரேவதி அக்கா சொல்ற மாதிரி வெறும் காத்துதான் வருது. நானும் கத்திட்டே இருக்கேன். எல்லாரும் வாய் வழியா பேசுவாங்க.. நான் ஈரக்குலைல இருந்து கத்திட்டு இருக்கேன். என்ன பண்றது உங்க கூட பிறந்து தொலச்சுட்டேன், உங்களைக் காதலிச்சுட்டேன். காதலிச்ச பெண், நம்மளை காதலிக்கன்னாலும் மறக்கம இருப்போம்ல.. அது மாதிரி உங்களை தொரத்திட்டு இருக்கேன். எத்தனை வருஷம்தான் துரத்துவது.
(இப்படி அவர் பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் "ஐ லவ் யூ" என்று சத்தமாக கூறினார்.. உடனே சீமான் பதிலுக்கு.. மீ டூ என்று பதில் கொடுத்து கலகலப்பாக்கினார்)
எங்க தமிழ் ஐயா கு. ஞானசம்பந்தன் சொல்வார்.. வகுப்பறையில் "இன்னா செய்தாரை ஒருத்தர் அவர் நாண நன்னயம் செய்து விடல்" இதைத் திருப்பிச் சொல்வாரு.. நாங்க இன்னொருவாட்டி சொல்லச் சொல்வோம்.. உடனே அவர் ஏன்டா, எங்க வாத்தியார் ஒரு தடவை சொன்னா அதை உள் வாங்கிட்டு படக்குன்னு திரும்பச் சொல்வோம் அப்படிம்பார்.. அதுக்கு நாங்க உங்களுக்கு நல்லவாத்தியார் பாடம் எடுத்திருக்காங்கய்யா அப்படிம்போம்.
அதுமாதிரி, நானும் பல வருஷமா பாடம் நடத்திட்டு இருக்கேன். ஒன்னும் சரியா வரலை.. ஒன்னு வாத்தியாரை மாத்தணும், இல்லாட்டி மாணவர்களை மாத்தணும். வாத்தியார் என்ன நினைக்கிறார்னா.. பேசாம பொண்டாட்டி பிள்ளையக் கூட்டிட்டு சீனாவுக்குப் போய்ர வேண்டியதுதான். நான் அந்த நாட்டுக்குத்தான் போக முடியும். வேற நாட்டுக்குள்ள என்னை விட மாட்டேங்குறான். நான் தீவிரவாதியாம் பயப்படறானுக. அருணாச்சல பிரதேசம் என்னோடது, அங்க இருந்து வர பாஸ்போர்ட் தேவையில்லைன்னு சீனா சொல்லிருச்சு.. அதனால குடும்பத்தோட அருணாச்சல பிரதேசம் போய்ட்டு, அங்கிருந்து சீனா போய்ர வேண்டியதுதான்.. வேற வழி கிடையாது.. வாரதுன்னா நீயும் வா என்றார் சீமான்.