"காற்றால் கதை சொல்வாய்.. கவிதையால் விடை சொல்வாய்"

Su.tha Arivalagan
Dec 13, 2023,06:12 PM IST

- அஸ்வின்


"மறக்க முடியாத"  என்று சொல்லும் விஷயங்கள் நம்ம வாழ்க்கையில் நிறைய இருக்கும்.. அதில் சிலவற்றை எப்போதுமே மறக்க முடியாத அளவுக்கு நமக்குள் கலந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் நா. முத்துக்குமார். கவிஞரா நா. முத்துக்குமாரை என்னால் மறக்கவே முடியாது.


நா. முத்துக்குமார் எழுதிய பாடல்களில் எனக்குபிடித்த பாடல்கள் ஏராளம். குறிப்பிட்டுச் சில பாடல்களை சொல்ல விரும்புகிறேன்.


ஏ எல் விஜய் இயக்கத்தில் அஜித் நடித்த கிரீடம் படத்தில் வரும் "அக்கம் பக்கம்" பாடல் காதலர்களின் உணர்வை இயல்பாகச் சொல்லிய பாடல். அதில் காதலர்களின் சின்னச் சின்ன விருப்பங்களை அழகாக வரிகளால் வடித்திருப்பார் நா. முத்துக்குமார்.




சைவம் படத்தில் எழுதிய அழியாத காவியம் என்றால் "அழகே அழகே" பாடல் தான். ஒரு குழந்தை தன்னுடைய வாழ்க்கை குறித்த உணர்வை அத்தனை அழகாக சொல்லியிருக்கும் எல்லோருக்கும் புரியும் வகையில். இந்த உலகத்தை எப்படி நேசிப்பது என்று எல்லோருக்கும் எளிமையாக சொல்லும் வகையில் அமைந்தது அந்தப் பாடல்.


"விழிகளில் ஒரு வானவில்".. ஒரு மனநலம் சரியில்லாத மனிதனிடம் ஒரு பெண் அவள் காதலை எப்படி சொல்வார் என்பதை அழகாக சொல்லி இருப்பார் நா. முத்துக்குமார். அந்தப் பாடல் அந்தப் படத்திற்கு மிகவும் பக்கபலமாக அமைந்து. படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்பாடலின் உணர்வு இன்னும் கூட குறையாமல் உள்ளது. 


ஆடுகளம் படத்தில் இடம்பெற்ற "அய்யய்யோ நெஞ்சு அலையுதடி" பாடல் இரண்டு காதலர்களுக்கு இடையே உள்ள ஒரு நல்ல நட்பையும் நட்போடு கலந்த பாசத்தையும் அழகாக சொல்லி இருப்பார் நா முத்துக்குமார். ஒருவன் படிப்பறிவு இல்லாதவனாக இருந்தாலும் அவனையும் ஒரு பெண் காதலிப்பார் என்று கூறி காதலை பெருமைப்படுத்தி இருப்பார். அந்தப் படத்தை நினைக்கும் போதெல்லாம் அந்தப் பாடல் தான் எனக்கு நினைவுக்கு வரும்.


தெறி படத்தில் இடம்பெற்ற "என் ஜீவன்" இளைஞர்களின் மனதை வருடிச் சென்ற பாட்டு. என்றும் அந்தப் பாடலுக்கு தனி இடம் உண்டு.  அதில் வரும் ஒவ்வொரு வரியும் காதலுக்கான அர்த்தத்தை குறிக்கிறது. "விடிந்தாலும் வானம் இருள் பூச வேண்டும் மடி மீது சாய்ந்து கதை பேச வேண்டும்" என்ற வரியில் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இருக்கின்ற ஒரு அழகான அன்பையும் நெருக்கத்தையும் சொல்லி இருப்பார் நா. முத்துக்குமார். 


"துளித் துளித் துளி மழையாய் வந்தாளே.. சுடச் சுடச் சுட மறைந்தே போனாளே.. பார்த்தால் பார்க்கத் தோன்றும்.. பெயரைக் கேட்கத் தோன்றும்.. உன் போல் சிரிக்கும் போது காற்றாய் பறந்திட தோன்றும்" என்ற பையா பட பாடலில் ஒவ்வொரு வரிகளிலும் காதல் அது பரிமாணத்தைச் சொல்லும். தான் ஒரு அட்டகாசமான எழுத்தாளர் என்பதையும் நிரூபித்திருப்பார் நா. முத்துக்குமார். அது எனக்கு மிகவும் பிடித்த பாடல். சோர்வாக இருக்கும் போதெல்லாம் அதைக் கேட்கும்போது புத்துணர்வைத் தரும்.


படம் வந்து பல ஆண்டுகள் ஆனாலும் பாடலுக்கு இன்னும் மதிப்பு குறையவில்லை. அதே பையா படத்தில் இடம்பெற்ற பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள்.. போகின்ற வழி எல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள் என்ற பாடலில் ஒவ்வொரு வரியிலும் காதலன் தன்னுடைய காதலை, சந்தோஷத்தை வெளிப்படுத்துவது அத்தனை அழகாக இருக்கும். 


பூஜை படத்தில் இடம்பெற்ற "அடி அழகே அழகே மெதுவாய் தொலைந்தேன் நானே என் இதயம் உருக தீயை வைத்தாய் நீயே"  என்ற பாடல் எனக்கு மட்டும் அல்ல அத்தனை இளைஞர்களுக்கும் பிடித்த பாடல். ஒரு காதலன் தனது காதலை நேரடியாக சொல்லாமல் மனதோடு வைத்துக் கொண்டு இருப்பதை அந்த பாடலில் வெளிப்படுத்தியிருப்பார் முத்துக்குமார். அது பாடல் அல்ல, கவிதை.. எங்களது இதயத்தை தாக்கிய வரிகள்.


நா. முத்துக்குமார் இளைஞர்களின் மனதை நிறையவே தாக்கத்தை ஏற்படுத்தியவர். காதலைப் பற்றி அவர் சொல்லி வைத்த பாட்டுக்கள் அத்தனை அழகானவை.. வாழ்க்கையை, காதலை, உணர்வுகளை உருக்கமாக கொடுத்த அருமையான உள்ளத்துக்காரர். நா. முத்துக்குமார் இறந்திருக்கலாம்.. ஆனால் அவரது பாடல்கள் என்றும் நம் இதயத்தில் இருக்கும். கதைக்கு முடிவு இருக்கலாம் ஆனால் கவிதைகள் முடியாது.. அதுபோல் நம்மிடம் அவர் இன்று இல்லாவிட்டாலும் கூட.. நமக்குள் எப்போதும் வாழ்ந்தபடி இருப்பார்.