"எனது மாணவ குடும்பமே.. அப்றம் என்னாச்சு".. தமிழில் பேசி அசத்திய பிரதமர் நரேந்திர மோடி

Manjula Devi
Jan 02, 2024,05:44 PM IST

திருச்சி : திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, எனது மாணவ குடும்பமே என தமிழில் பேசி தனது உரையை துவக்கி, அனைவரையும் அசர வைத்தார். பாரதிதாசன் சிலையை கண்டதும், செருப்பை கழற்றி விட்டு அருகில் சென்று வணங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


தமிழ்நாட்டில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் அவர் பங்கேற்றார். பிரதமர் வருகையைத் தொடர்ந்து திருச்சியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், விராலிமலை வழியாக வாகனப் போக்குவரத்து நடைபெறுகிறது. 




பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாணவர்களுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார். பிறகு அங்கு மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதிதாசன் பாடல் வரிகளின் படி இந்தியா புதிய உலகம் படைத்து வருகிறது. 


பாரதிதாசன் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது எனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது. பட்டங்கள் பெற்ற மாணவிகள், ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். 2024  புது ஆண்டில் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும். பாரதிதாசன் பல்கலைக்கழகம் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது. பட்டமளிப்பு என்பது தமிழ்நாட்டில் பழம்பெரும் பாரம்பரியமானது. 


சங்க காலத்தில் புலவர்கள், இயற்றிய செய்யுள்கள், பாடல்கள், அரசர்களால் ஏற்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வுக்குப் பிறகு பாடல்களை இயற்றிய புலவர்கள் இலக்கியவாதிகளாக அங்கீகரிக்கப்பட்டனர். சங்ககாலத்தில் கடைபிடிக்கப்பட்ட முறைதான் தற்போதும் கல்வித்துறையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாபெரும் அறிவு சார் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக வருபவர்கள், 

இன்றைய மாணவர்கள் நாட்டுக்கு புதிய திசை வழியை காட்டும் முக்கிய பணியை நிறைவேற்றுபவை பல்கலைக்கழகங்கள். இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. மிக நீளமான கடற்கரை கொண்டது தமிழ்நாடு .கடந்த 10 ஆண்டுகளில் சரக்குகளை கையாளும் இந்தியாவின் திறன் இருமடங்காக உயர்ந்துள்ளது.


நீங்கள் படிக்கும் அறிவியல் உங்களின் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயன் தரும். நீங்கள் படிக்கும் தொழில்நுட்பங்களால் கடினமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். நீங்கள் படிக்கும் தொழில் மேலாண்மை பல்வேறு தொழில்களை வளர்ப்பதுடன், மற்றவர்களின் வருமானத்தையும் உயர்த்தும். நீங்கள் கற்கும் பொருளாதாரம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதுடன் வறுமையை குறைக்கும் என்றார்.


திருச்சி விமான முனையத் திறப்பு


திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின் பிரதமர், முதல்வர் உரை நிகழ்த்தினார்கள். அதைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையம் திரும்பிய பிரதமர் மோடி, அங்கு ரூ. 1100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய  விமான நிலைய முனையத்தை  திறந்து வைத்தார். 


நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ஜோதிராதித்யா சிந்தியா, எல். முருகன், தமிழ்நாடு அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விமான நிலைய புதிய முனையத்தில் 60 செக் இன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டு பயணிகளின் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.


இங்கு வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு 44 குடியேற்றத்துறை கவுண்டர்களும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 60 குடியேற்றத்துறை கவுண்டர்களும் அமைக்கப்பட்டுள்ளது.