ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக.. எனது மகள்தான் காரணம்.. சுதா மூர்த்தி

Su.tha Arivalagan
Apr 28, 2023,02:30 PM IST
டெல்லி: ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராவதற்கு எனது மகள்தான் காரணம் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் சுதா மூர்த்தி கூறியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இருக்கிறார். இவரது மனைவி அக்ஷதா மூர்த்தி. இவர் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி - சுதா தம்பதியின் மகள் ஆவார். இந்த நிலையில் ரிஷி சுனக் பிரதமராவதற்கு தனது மகளே காரணம் என்று சுதா மூர்த்தி கூறியுள்ளார்.



இதுதொடர்பாக அவர் பேசிய ஒரு வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. அதில் சுதா மூர்த்தி கூறியிருப்பதாவது: நான் எனது கணவரை ஒரு பிசினஸ்மேனாக மாற்றினேன். எனது மகள் தனது கணவரை இங்கிலாந்து நாட்டுக்கே பிரதமராக்கி விட்டார்.

ஒரு மனைவி நினைத்தால் என்ன வேண்டுமானாலும் சாதிக்க முடியும். ஒரு கணவரின் உயர்வுக்கு மனைவிதான் முக்கியக் காரணம். அதற்கு இதுதான் உதாரணம்.  ஆனால் என்னால் எனது கணவரை பெரிதாக மாற்ற முடியவில்லை. பிசினஸ் மேனாக மட்டுமே மாற்ற முடிந்தது. என்றார் அவர்.

2009ம் ஆண்டு அக்ஷதா மூர்த்தி, ரிஷி சுனக் திருமணம் நடந்தது.  அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு 730 மில்லியன் பவுண்டு ஆகும்.  உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக அவர் திகழ்கிறார்.  இங்கிலாந்து வரலாற்றிலேயே மிகவும் இளம் வயதுப் பிரதமர் ரிஷி சுனக்தான். அவருக்கு 42 வயதாகிறது. 

சுதா மூர்த்தி மேலும் கூறுகையில், எனது  மகள் த��து கணவரின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். இருவருமே வியாழக்கிழமைகளில் தவறாமல் விரதம் இருப்பார்கள். வியாழக்கிழமைக்கும் எங்களுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. வியாழக்கிழமைதான் இன்போசிஸ் தொடங்கப்பட்டது. எனது மருமகன் குடும்பமும் மிகவும் மத சம்பிரதாயங்களை மதிக்கும் குடும்பமாகும். அவரும் வியாழக்கிழமை தவறாமல் விரதம் இருக்கிறார். எனது மகளின் மாமியார் திங்கள்கிழமை விரதம் இருப்பார் என்று கூறியுள்ளார் சுதா.