எட்டயபுரத்தில்.. கர்நாடக சங்கீத மேதை முத்துசுவாமி தீட்சிதரின்.. 250 வது ஜெயந்தி விழா கொண்டாட்டம்!

Manjula Devi
Mar 31, 2025,12:51 PM IST

தூத்துக்குடி: கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஐயன் முத்து சுவாமி தீட்சிதர் அவர்களின் 250 ஆவது ஆண்டு ஜெயந்தி விழா எட்டயபுர சமஸ்தானத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


மேகம் தொட்டு மழை வரச் செய்யும் அமிர்தவர்ஷினி ராகத்தின் அன்னை, சொல்லி எடுத்து இசை வடித்து சுபராகங்களை அள்ளிக் கொடுத்த இசை சிற்பி, மேளகர்த்தா ராகங்களிலும் கீர்த்தனைகள் எழுதிய ராகதேவன், ஏழு அடிப்படை தாள வகைகளிலும் கீர்த்தனைகளை எழுதிய கர்நாடகா இசை மேதை, என பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான சங்கீத மும்மூர்த்திகளின் ஒருவரான இசை மேதை ஐயன் முத்துசுவாமி தீட்சிதர்  1775ல் திருவாரூரில் பிறந்தவர். 




தந்தை ராமசாமி தீட்சிதரிடம் முறைப்படி சங்கீதம் பயின்றார். இந்துஸ்தானி இசையிலும் தீட்சி பெற்றார். முருகப்பெருமானின் தீவிர பக்தன் என்பதால் அவரையே தனது குருவாகவும் ஏற்றுக் கொண்டார். இவர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், போன்ற மொழிகளில்  தீட்சனைகளை இயற்றியுள்ளார். குறிப்பாக தெய்வீகமும் இசையும் இரண்டறக் கலந்து 72 மேள கர்த்தா ராகங்களிலும் கீர்த்தனைகளை இயற்றியவர். தத்துவ ஞானத்திலும் பயிற்சி பெற்ற தீட்சிதர். கோயில்களில் தெய்வீக பாடல்களையும் பாடியுள்ளார். ‌அதேபோல் இசை உலகில் தன்னிகரற்ற 64ஆவது நாயன்மார், 13 ஆவது ஆழ்வார் உள்ளிட்ட புகழுக்கு சொந்தக்காரராகவும் திகழ்பவர். தனது வாழ்நாளில் 500 பாடல்களை இயற்றியுள்ளார். நாடு முழுவதும் சுற்றி இசை மூலம் தனது தொண்டுகளை செய்துள்ளார்.




பிரபல வீணை இசை கலைஞர் வெங்கட்ராம ஐயர், மிருதங்க  இசைக்கலைஞர் தம்பி அப்பா, சியாம சாஸ்திரியின் மகன் சுப்புராய சாஸ்திரி ஆகியோர் முத்து சுவாமி தீட்சிதரின் சீடர்களாவர். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஐயன் முத்துசாமி தீட்சிதர் தனது வாழ்நாளில்  கடைசியாக எட்டயபுரம் வந்தடைந்தார். இங்கு ஏற்பட்ட கடும் வறட்சியைக் கண்டு மனம் நொந்து வறட்சியை மீட்டெடுக்க அமிர்தவர்ஷினி ராகத்தை தோற்றுவித்தார்.


1835 ஆம் ஆண்டு எட்டயபுர சமஸ்தானத்தின் பட்டத்து யானை திடீரென ஊர் எல்லையில் உள்ள சுடுகாட்டில் சென்று படுத்துவிட்டது. யானையை எழுப்ப எவ்வளவு முயன்றும் முடியவில்லை. பின்னர் எட்டயபுரம் மகாராஜா ஜெக வீரராம வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கர் 




முத்துச்சாமி தீட்சிதரிடம் ஆலோசனை கேட்டார். உடனே தீட்சிதர் தனது சீடர்களுடன் சுடுகாட்டிற்கு புறப்பட்டு தான் இயற்றிய  கீர்த்தனைகளை மனமுறுகி பாடினார். இசையில் மனம் மகிழ்ந்து, இசைக்கு கட்டுப்பட்டு யானை எழுந்து அரண்மனைக்குப் புறப்பட்டது. ஒரு சமயம் முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனைகளை சீடர்கள்  அரங்கேற்றுக் கொண்டிருக்கும்போதே அதனைக் கேட்டுக்கொண்டு மனம் மயங்கி இறைவனடி சேர்ந்தார் அவர்.


எட்டயபுர அரண்மனைக்கு வரும் ஏதோ அபாயத்தை தான் வாங்கிக் கொண்டு தனது உயிரையே மாய்த்துக் கொண்ட முத்துசாமி தீட்சிதரை கௌரவிக்கும் விதமாக முத்து என்ற பெயரை தனது வாரிசுகளின் பெயர்களுடன் இணைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் முத்து என்ற பெயரை தங்களது பிள்ளைகளுக்கு வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை  விடுத்தார். இதன் மூலம் எட்டயபுரத்தில் முத்து என்ற பெயர் மிகவும் புகழ் பெற்றதாக விளங்குகிறது.




இப்படி தெய்வீகப் புகழ்பெற்ற சங்கீத சக்கரவர்த்தி முத்துசாமி தீட்சிதரின் 250 வது ஆண்டு ஜெயந்தி விழா எட்டயபுர சமஸ்தானம் சார்பில் அரண்மனை மைதானத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது அவருடைய கீர்த்தனை நிகழ்ச்சியோடு தொடங்கியது. இவ்விழாவில் கர்நாடக சங்கீத கலைஞர் கலைமாமணி  நித்யஸ்ரீ மகாதேவன் கீர்த்தனை அரங்கேற்றம் செய்தார். ஸ்ரீ இசைப்பள்ளியினர் கீர்த்தனைகள் இசைத்து இசை அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பின்னணி பாடகர்கள்  சத்ய பிரகாஷ் மற்றும்  பூஜா வைத்தியநாதன்   ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றம் செய்யப்பட்டது .


இந்நிகழ்வில், புதுக்கோட்டை ராணியார்  சாருபாலா ஆர். தொண்டைமான், கள்ளிப்பட்டி ஜமீன் காகுத் கார்த்திகேயன், ராஜா ரவிவர்மா வழிப் பெயரன் கிளிமனூர்  ராஜா ராமவர்ம தம்புரான், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், மாவட்ட முதன்மை நீதிபதி  ஆர்.வசந்தி, மகாகவி பாரதியாரின் பெயரன் நிரஞ்சன் பாரதி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று முத்துஸ்வாமி தீட்சிதருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் இரவு விருந்து எட்டயபுரம் சமஸ்தானம் சார்பில் பரிமாறப்பட்டது.