பழனியில் களை கட்டிய முத்தமிழ் முருகன் மாநாடு.. பங்கேற்பவர்களுக்கு .. 200 கிராம் பஞ்சாமிர்தம் இலவசம்!

Meenakshi
Aug 24, 2024,01:11 PM IST

பழனி: பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கியுள்ள நிலையில், மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு தலா 200 கிராம் பஞ்சாமிர்தம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்து அறநிலைத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் மாநாடு இன்று தொடங்கியது. முருகனின் ஆறுபடை வீடுகளுள் ஒன்று பழனி. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாடு பழனி ஆண்டவர் கலை கல்லூரியில் பிரமாண்ட அளவில் நடைபெறுகிறது. 




இந்த நிகழ்ச்சியில் 5 ஆய்வகங்களில் 1300 பேர் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்க உள்ளனர். 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள், ஆதீனங்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இரண்டு நாள் நடைபெறும் மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதற்காக பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 2000த்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


மாநாட்டை முன்னிட்டு 8 இடங்களில் அலங்கார வளைவுகள், 100 அடி உயர கொடி,  8000 பக்தர்கள் அமருவகையில் பந்தல், பக்தர்களின் வசதிக்காக மருத்தவ வசதி, பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.மாநாட்டில் கலந்து கொள்ளும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர்களுக்கு உணவு ஏற்பாடுகள் மற்றும் இவ்விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கு பஞ்சாமிர்தம், குங்குமம், விபூதி, லேமினேசன் செய்யபட்ட முருகன் போட்டோ வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


சாதனைகளுக்கு மகுடம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 




மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:


இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதற்கு வாழ்த்துக்கள். அறநிலைத்துறைக்கு அமைச்சராக சேகர் பாபு வந்ததுக்கப்புறம். கோயிலை கவனிச்சுங்கோங்கனு நான் சொன்னோன். அதற்கு அவர் கோயில்லேயே  குடியிருக்கிறார்.  இப்படிப்பட்ட ஒருவர் அறநிலைத்துறை அமைச்சராக கிடைத்துள்ளார்.பக்தர்கள்  அனைவரும் விரும்பும் ஆட்சியை திமுக வழங்கி வருகிறது.ஏழு கோவில்களிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


பழனி, திருத்தணி, திருச்செந்தூர், மருதமலை, குமாரவயலூர், காந்தல் உள்ளிட்ட 7 முருகன் கோவில்களில் பெருந்திட்ட பணிகள் நடந்து வருகிறது. பழனியில் பக்தர்கள் அதிகம் வருகிறார்கள். அதனால் கோவில் வளர்ச்சி பணிகளை தற்போது தொடங்கியிருக்கிறோம். அறுபடை வீடுகளில் ரூ.789 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 69 முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1335 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 


பழனிக்கு தைப்பூசம், பங்கு உத்திரத்திற்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அறுபடை ஆன்மிக சுற்றுலா பயணத்திற்கு 813 பேர்  அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். எல்லா கோவில்களிலும் கட்டணம் இல்லாமல் முடி காணிக்கை செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முடி காணிக்கை பணியாளர்களுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.முருகன் கோவில்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கி பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.


பழனியில் திடீர் என்று மாநாடு நடத்தப்பட வில்லை. பல்வேறு ஏற்பாடுகள் செய்த பிறகு தான் மாநாடு நடத்தப்படுகிறது. திருக்கோவில் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவருக்கும் ஓவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கும். அதற்கு திராவிட மாடல் அரசு தடையாக இருந்ததில்லை. எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் அரசு. கோவில் வளர்ச்சிக்கு பணியாற்றுபவர்களின் முன்னேற்றத்திற்கும் திமுக அரசு பணியாற்றி வருகிறது. ரூ.5570 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சாதனைகளுக்கு மகுடம் வைத்தது போன்று பழனியில் நடக்கும் முத்தமிழ் முருகன் மாநாடு திகழும் என்று கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்