தேம்பி தேம்பி..  ஆர்ப்பரித்த ஆனந்த கண்ணீர்.. நெகிழ்ச்சியில் 'வாரிசு' இசையமைப்பாளர்!

Baluchamy
Jan 11, 2023,03:00 PM IST
சென்னை: இயக்குநர் வம்சி இயக்கத்தில் தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட 'வாரிசு' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. நடிகை ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 



வாரிசு திரைப்படம் இன்று ரசிகர்களின் ஆரவாரத்துடனும், கலர்புல் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை சுக்குநூறாகிய நிலையில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதற்கு காரணம் இசையமைப்பாளர் தமன் தான் என கூறலாம். படம் வெளியாவதற்கு முன்னரே ரஞ்சிதமே, தீ தீ தளபதி உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களை துள்ளாட்டம் போடவைத்தது. பீஸ்ட் படத்தின் விரக்தியில் மூழ்கியிருந்த விஜய் ரசிகர்களை தமன் இசை தட்டி எழுப்பியது.

மேலும் இது போதாதென படத்தின் ட்ரைலர் வெளியாகி சில நிமிடங்களில் கோடிக்கணக்கான வியூஸ் பெற்று வைரலானது. இந்தியா- பாக்கிஸ்தான் போல் எப்போதும் போட்டாபோட்டி போடும் அஜித் விஜய் ரசிகர்களுக்கு இம்முறை ஒரே நாளில் இரு படங்கள் வெளியாகி "யார் பெருசு அடுச்சு காமிங்க" என்பது போல் ஆகிவிட்டது.

இந்நிலையில் இன்று வாரிசு திரைப்படம் தமிழகத்தில் கோலாகலமாக வெளியான நிலையில் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் வாரிசு படத்தின் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில்ராஜ், இசையமைப்பாளர் தமன் மற்றும் நடிகர் ஷாம் உள்ளிட்டோர் முதல் காட்சியை ரசிகர்களுடன் கண்டுகளித்தனர்.

படம் முடிந்த பின்னர் ரசிகர்களின் கரகோசத்தை கண்டு மகிழ்ச்சியில் மூழ்கிய இசையமைப்பாளர் தமன் திடீரென கண்ணில் ஆனந்த கண்ணீர் ஆறாக ஓடியது. "நாம ஜெயிச்சிட்டோம் மாறா" என்று சொல்வது போல் வாரிசு படத்தின் வெற்றியை கண்ட மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரில் திக்குமுக்காடினார் இசையமைப்பாளர் தமன்.

அவரை இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில்ராஜ் மற்றும் நடிகர் ஷாம் உள்ளிட்டோர் சாந்தப்படுத்தி அணைத்துக் கொண்டனர். தற்போது இந்த வீடியோ ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணையதளத்தில்  வைரலாகி வருகிறது. அஜித்தின் துணிவுடன், வாரிசு திரைப்படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனில் யார் டாப் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.