ஏ.ஆர்.ரஹ்மான் நலம்.. மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.. மகன் அமீன் தகவல்
சென்னை: இசைப் புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று அதிகாலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இன்று அதிகாலையில், திடீர் அசவுகரியம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானை அப்பல்லோ மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர். மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிகிச்சை அளித்து வந்தது. அவருக்கு பல்வேறு பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதை ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த அறிக்கையில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று காலை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உரிய மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியிருந்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு கழுத்து வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் மருத்துவப் பரிசோதனை செய்திருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவருக்கு திடீர் அசவுகரியம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
58 வயதான ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்தனர். ஆனால் தற்போது இசைப் புயல் பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளனர்.