பரபரப்பான வாக்கு எண்ணிக்கை எதிரொலி.. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் சரிந்தது!

Su.tha Arivalagan
Jun 04, 2024,10:02 AM IST

மும்பை: வாக்கு எண்ணிக்கையின்போது தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பின்னடைவு என்ற செய்தி வந்த நிலையில் மும்பை பங்குச் சந்தையில்  பெரும் சரிவு காணப்பட்டது.


சென்செக்ஸ் 2000 புள்ளிகள் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. லோக்சபா தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.




அதேசமயம், உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை எடுத்துள்ளது. பாஜகவுக்கு அங்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதேபோல வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கும் பின்னடைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மும்பை பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது.  சென்செக்ஸ் 2000 புள்ளிகள் சரிந்தன. தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் இன்டக்ஸ் 50 குறைந்தது. 


பாஜக கூட்ட அசுரத்தனமான முன்னிலை பெறத் தவறியதாலும், பிரதமரே பின்னடைவு என்ற செய்தி வந்ததாலும் பங்குச் சந்தையில் அது எதிரொலித்துள்ளது. பிரதமர் முன்னிலை பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தேறினால் மட்டுமே பங்குச் சந்தை இயல்புக்குத் திரும்ப முடியும். இல்லாவிட்டால் இன்னும் சரிவைக் காணும் அபாயம் உள்ளது. தற்போது பிரதமர் மோடி முன்னிலைக்கு வந்து விட்டார். அதேபோல தேசிய ஜனநாயகக் கூட்டணியும் சரிவிலிருந்து மீள ஆரம்பித்துள்ளது.


தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் இருந்தாலும் கூட, இந்தியா கூட்டணியும் கடும் போட்டியைக் கொடுத்து வருகிறது. டிரெண்டும் மாறத் தொடங்கியுள்ளதால் எல்லாத் தரப்பிலும் எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பித்துள்ளன.