மும்பையில் மீண்டும் கன மழை.. தண்ணீரில் மிதக்கும் மும்பை.. இயல்பு நிலை கடும் பாதிப்பு!

Manjula Devi
Jul 25, 2024,11:41 AM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.


மகாராஷ்டிராவில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மும்பை உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பை, கலீனா, செம்பூர், ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மழை நீர்  உள்ள குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.




தற்போது மும்பையில் பல பகுதிகளில் இருந்தும் நீர் வரத்து அதிகரித்து வருவதால் மித்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக மும்பை அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டது. அதேபோல் மும்பையில் குடிநீர் வழங்கும் 7 ஏரிகளில் ஒன்றான விஹார் ஏரியும் தற்போது பெய்யும் கனமழை காரணமாக நிரம்பி உள்ளன. இந்த ஏரியிலிருந்து  வெளியேறும் உபரி நீரால் சாலை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் ஊர்ந்து செல்கின்றன.

தற்போது மும்பையில் தண்ணீர் வெளியேறக்கூடிய பகுதியை சீரமைக்கும் பணிகளை பணியாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.


அதேபோல் புனேயில் பெய்து வரும் கனமழை காரணமாக கதக்வஸ்லா அணையிலிருந்து தற்போது தண்ணீர் வெளியேற்றப்படுகிறது கனமழையால் புனேவில் உள்ள ஏக்ஸா நகர், மற்றும் வித்தால் நகர் முழுவதும் தண்ணீர் நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். குறிப்பாக புனே புறநகர் பகுதியான அதர்வாடி கிராமத்தில் கன மழையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பல்காரில் தொடர் கனமழை எதிரொலியாக உடனடியாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.