மொஹரம் பண்டிகை 2024 .. தியாகத்தை போற்றும் திருநாள்.. இஸ்லாமியர்களின் புனித மாதம்!

Aadmika
Jul 17, 2024,10:43 AM IST

சென்னை :   இஸ்லாமியர்களின் நான்கு புனித மாதங்களில் ஒன்று மொஹரம். ரமலான் மாதத்திற்கு பிறகு இஸ்லாமியர்களுக்கு மிக முக்கியமான மாதமாக மொஹரம் மாதம் கருதப்படுகிறது. சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் மாதமாகவும், இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதமாகவும் வருவது மொஹரம். இருந்தாலும் இஸ்லாமியர்கள் இதை கொண்டாடுவது கிடையாது. இது தியாகத்தை போற்றும் துக்க மாதமாகவே அவர்கள் கடைபிடிக்கிறார்கள்.


மொஹரம் மாதத்தின் 10 வது நாளுக்கு ஆஷூரா என்று பெயர். ஆஷூரா என்ற அரபு சொல்லுக்கு பத்து என்று பொருள். இறை தூதரான முகம்மது நபிகளின் பேரன் ஹூசைன் இபின் அலி, கர்பாலா போரில் எதிரிகளால் கொல்லப்பட்ட துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவே மொஹரம் பண்டிகை கடைபிடிக்கப்படுகிறது. மொஹரம் மாதத்தின் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் இஸ்லாமியர்கள் நோம்பு கடைபிடிப்பதுண்டு. 




மொஹரம் பண்டிகையானது இஸ்லாமியர்களின் இரண்டு பிரிவினர்களான சன்னி மற்றும் ஷியா முஸ்லீம்களால் இரண்டு விதமாக கடைபிடிக்கப்படுகிறது. அதாவது, முகம்மது நபிகளின் பேரன் கொல்லப்பட்டதை நினைவு கூறும் விதமாக ஷியா முஸ்லீம்கள் மொஹரத்தை துக்க நாளாக கடைபிடிக்கிறார்கள். அதே சமயம், இறைத்தூதரான மூசா கடல் அலைகளில் இருந்து அல்லாஹ்வால் காப்பாற்றப்பட்ட மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக சன்னி முஸ்லீம்கள் இதை மகிழ்ச்சியான நாளாக கொண்டாடுகிறார்கள்.


ஷியா முஸ்லீம்கள் தங்களின் துக்கத்தையும், ஹூசைன் இபின் அலி பாலைவனத்தில் உணவு, தண்ணீர் இல்லாமல் பட்ட கஷ்டத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதற்காகவும் ஆஷூரா நாளில்  கருப்பு உடையணிந்து, மெளன ஊர்வலம் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிலர் மார்பில் அடித்து அழுதும், மார்பில் கத்தி போன்றவற்றால் கீரிக் கொண்டும் ஊர்வலமாக சென்று தங்களின் துக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.


இந்த ஆண்டு ஜூலை 07ம் தேதி மொஹரம் மாதம் துவங்கியதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, 10 வது நாளான ஜூலை 17ம் தேதியான இன்று இந்தியாவில் மொஹரம்  கடைபிடிக்கப்படுகிறது. அதே சமயம், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் ஜூலை 16ம் தேதி மொஹரம் கடைபிடிக்கப்பட்டது.