இன்று மொஹரம் பண்டிகை.. வரலாறும் முக்கியத்துவமும்!

Aadmika
Jul 29, 2023,09:57 AM IST
சென்னை : இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்று மொஹரம். இன்று மொஹரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இஸ்லாமிய நாட்காட்டியின் படி புத்தாண்டின் முதல் மாதம் மொஹரம். இது அல்லாஹ்வின் மாதம் என முகம்மது நபிகள் குறிப்பிடுகிறார். புத்தாண்டின் துவக்கமான மாதமாக இருந்தாலும் இஸ்லாமியர்கள் இதை மகிழ்ச்சியாக கொண்டாடுவதில்லை. மொஹரம் என்பது இஸ்லாமியர்களின் துக்க நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.



இறை தூதரான முகம்மது நபியின் பேரனான இமாம் ஹூசைன், கர்பாலா போரில் இரக்கமின்றி கொல்லப்பட்டதை நினைவுகூறும் விதமாகவே மொஹரம் பண்டிகை அனுஷ்டிக்கப்படுகிறது. மொஹரம் பண்டிகையை ஆஷூரா என்றும் சொல்வார்கள். ஆஷூரா என்ற அரபு மொழி சொல்லுக்கு 10 வது நாள் என்று பொருள். மொஹரம் மாதத்தின் 9 மற்றும் 10 வது நாட்களில் நோன்பிருந்து இஸ்லாமிய பெருமக்கள் மொஹரம் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

இந்த நாளில் இஸ்லாமியர்கள் கறுப்பு உடையணிந்து ஊர்வலம் செல்வதும் வழக்கம். அதே போல் மார்பில் ஓங்கி அடித்துக் கொண்டு ஊர்வலமாக செல்வதும், கத்தி போன்ற ஆயுதங்களால் தங்களை வருத்திக் கொண்டு ஊர்வலமாக செல்வது வழக்கம். இதை மாரடி ஊர்வலம் என்றும், கத்தி போடும் திருவிழா என்றும் இஸ்லாமியர் குறிப்பிடுகிறார்கள். இஸ்லாமியர்களின் உட்பிரிவான ஷாய் இஸ்லாமியர்கள் மொஹரம் பண்டிகையை துக்க நாளாக கடைபிடிக்கிறார்கள்.

அதே சமயம் சன்னி இஸ்லாமியர்கள் இந்த நாளை புத்தாடை அணிந்தும், இனிப்புக்கள் வழங்கியும், வாழ்த்துக்கள் சொல்லியும் உற்சாகமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் கொண்டாடுவது வழக்கம்.  இந்தியாவின் தென் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் மொஹரத்தை துக்க நாளாகவும், வட இந்தியாவில் உள்ளவர்கள் மகிழ்ச்சியான நாளாகவும் கொண்டாடுகிறார்கள். 

இந்த ஆண்டு மொஹரம் மாதம் ஜூலை 19 ம் தேதி துவங்கியது. மொஹரம் மாதத்தின் 10 வது நாளான ஜூலை 29 ம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.