வெயில் கொடுமையை சமாளிக்க.. பணியாளர்களுக்கு ஜில் மோர்.. சென்னை போக்குவரத்து கழகம் ஏற்பாடு!

Manjula Devi
Apr 30, 2024,05:15 PM IST

சென்னை:  வெயில் தாக்கத்தை சமாளிக்கவும் டிரைவர்கள்,  கண்டக்டர்கள், ஊழியர்கள் ஆகியோர் அவர்களது பணியை தடையில்லாமல் செய்யும் வகையிலும் டிப்போக்களில் மோர் கொடுக்கும் சேவையை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தொடங்கியுள்ளது.


கடந்த சில நாட்களாக வெயில் பொது மக்களை வாட்டி எடுத்து வருகிறது. மே 1ஆம் தேதி முதல் வெப்ப அலை இன்னும் கடுமையாக இருக்கும் எனவும், இதற்காக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.




இதனையடுத்து தமிழக அரசு பொதுமக்களை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. வெயில் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்  வழங்கியும் வருகிறது.


வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்பதால்,பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து வரும் நிலையில், தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக பொதுமக்கள் வெளியே செல்கின்றனர். அப்போது அவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். 


தற்போது நிலவும் வெயிலின் கொடுமையால் அந்த வாகனங்களை ஓட்டும் பணியாளர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதில் பஸ்களை இயக்கி வரும்  டிரைவர்கள், கண்டக்டர்கள்தான் பாவம். மதியம் 12 மணி ஆனாலும் வெயில் தாக்கத்தை பொருட்படுத்தாமல் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தங்களின் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்.




இந்த நிலையில் சென்னை மாநகராட்சியை போலவே சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமும் தங்களது பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மோர் கொடுக்கும் பணியை தொடங்கியுள்ளது. சென்னை போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட அனைத்து பேருந்து நிலையத்திலும் பணிபுரியும் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மோர் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் பல்வேறு தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


தமிழக அரசு மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்தவர்களும், பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் நீர் மோர் பந்தல், மண்பானை குடிநீர் போன்றவை கொடுத்து வருகின்றனர்.