உங்க வீடு திருவள்ளூர்லயா இருக்கு?.. அப்டீன்னா இனி நீங்க ஈசியா கிளாம்பாக்கம் போகலாம்!
Jun 19, 2024,04:16 PM IST
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து, திருவள்ளூருக்குப் புதிய பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை புறநகரான கிளாம்பாக்கத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் பல்வேறு வசதிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் இங்கு வருவது சுலபமாகியுள்ளது. விரைவில் ரயில் நிலைய வசதியும் கிடைக்கவுள்ளது. அதேபோல மெட்ரோ ரயிலுக்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கிளாம்பாக்கத்திலிருந்து திருவள்ளூருக்குப் புதிய பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. தடம் எண் 297, கிளாம்பாக்கம் டூ திருவள்ளூர் இடையே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய பஸ் சேவையானது, கிளாம்பாக்கத்திலிருந்து திருமுடிவாக்கம், சிட்கோ, பூந்தமல்லி பேருந்து நிலையம், திருமழிசை, மணவாளன் நகர் வழியாக இயங்கும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் திருவள்ளூரிலிருந்து நேரடியாக கிளாம்பாக்கத்தில் பஸ்சில் வரும் வசதி கிடைத்துள்ளது
ரயிலில் வருவதாக இருந்தால் தற்போது சென்டிரல் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து பூங்கா நகர் ரயில் நிலையம் மாறி பின்னர் வண்டலூர் வரை சென்று பிறகு பஸ் நிலையத்தை அடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.