பயணிகளிடம் வரம்பு மீறிப் பேசிய நடத்துனர்.. ஆக்ஷனில் குதித்த எம்டிசி.. பஸ் தாமதத்திற்கும் விளக்கம்

Su.tha Arivalagan
Jan 07, 2024,10:05 AM IST

சென்னை: சென்னை கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் டவுன் பஸ்கள் தாமதம் தொடர்பாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.


சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் என்பதால் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் வந்தவண்ணம் உள்ளது. இதுகுறித்து தகவல்கள் வெளியாக வெளியாக அதைச் சரி செய்யும் முயற்சிகளில் அரசும் போக்குவரத்துத் துறையும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன.


இந்த நிலையில் தற்போது மிக முக்கியப் பிரச்சினையாக கிளாம்பாக்கத்திலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்வதற்கான டவுன் பஸ்கள் தொடர்பாக புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது. போதிய அளவில் பஸ்கள் இல்லை என்று பலர் புகார் கூறி வருகிறார்கள். குறிப்பாக நேற்று இந்தப் பிரச்சினை பெரிதாக வெடித்தது.




பஸ்ஸுக்காக நீண்ட நேரமாக காத்திருந்தும் ஒரு பஸ் கூட வரவில்லை. இதுகுறித்து போக்குவரத்து ஊழியர்களிடம் கேட்டால் கிண்டலாகப் பதிலளிக்கிறார்கள் என்று பெண்கள் பலர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தனர்.


இதுதொடர்பாக தற்போது சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


மாநகரப் போக்குவரத்து கழகத்தின் மூலம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து 298 பேருந்துகள் மூலம் 1691 பயண நடைகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வழியாக 202 பேருந்துகள் மூலமாக 2386 பயன நடைகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வழியாக 4077 பயன நடைகள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மயிலாப்பூர் வழியாக பிராட்வே வரை தடம் எண் 21 ஜி யில் 164 பயண நடைகள் இயக்கப்படுகிறது. காலையில் மாரத்தான் போட்டியானது போர் நினைவு சின்னம் முதல் காமராஜர் சாலை வழியாக பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் பள்ளி வரை நடைபெற்றதால் அவ்வழியாக இயக்கப்படும் சில பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சற்று காலதாமதமாக வந்த போதும் மாற்று பேருந்துகள் மூலம் மயிலாப்பூருக்கு பேருந்து இயக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.


மேலும் நடத்துனர் பொதுமக்களிடம் பேசிய விதம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லாததால் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நள்ளிரவில் ஆய்வு




இந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்  டாக்டர் அல்பி ஜான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பஸ்கள் இயக்கப்படுவதுக குறித்தும் ஆய்வு நடத்தினார். பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும், பஸ்கள் தாமதமானால் அதுகுறித்து உரிய முறையில் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.