"பசுமை நிறைந்த நினைவுகளே".. தோழிகளின் ஜாலியான போட்டோ சூட்.. நாடாளுமன்றத்தில்!

Su.tha Arivalagan
Sep 20, 2023,02:27 PM IST
புதுடெல்லி:  கலகலப்பாக சிரித்தபடியும், கை கோர்த்தபடியும், கட்டி அணைத்தபடியும், கண்களில் நீர் மல்க காட்சி அளித்தபடியும்.. நேற்று முழுவதும் நாடாளுமன்றத்தில் காணப்பட்ட காட்சி அது.

வழக்கமாக கல்யாண மண்டபங்களில்தான் இதுபோன்ற காட்சிகளை அதிகம் காண முடியும். அந்த களேபரம்தான் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காணப்பட்டது. பழைய நாடாளுமன்றம் நேற்றுடன் நிறைவு பெற்றது. புதிய நாடாளுமன்றத்தில் இப்போது கூட்டங்கள் தொடங்கியுள்ளன. அதற்கு முன்பாக மைய மண்டபத்தில் இரு அவை கூட்டத்தொடர் நடைபெற்றது.



இந்தக் கூட்டம் முடிந்த பிறகுதான் இந்த போட்டோஷூட் களேபரங்கள் அரங்கேறின. தமிழ்நாட்டு எம்.பிக்கள் பலரும் ஜாலியாக கூடிக் கூடி போட்டோக்கள் எடுத்து மகிழ்ந்தனர். திமுகவைச் சேர்ந்த எம்பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி ஆகியோர் செல்பி மற்றும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்பு தோழிகளுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.

நேற்று பிரதமர் நரேந்திர மோடி கூட்டுக் கூட்டத்தில் பேசும்போது, நான் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுகிறேன். இந்த நாடாளுமன்றத்தின் பெருமை ஒருபோதும் குறைய கூடாது. நாம் இதனை பழைய நாடாளுமன்றம் என அழைப்பதற்கு பதிலாக சம்விதான் சதன் என  அழைக்க வேண்டும். (சம்விதான் சதன் என்றால் அரசியலமைப்பு அவை என்று பொருள்) இப்படி அழைத்தால் ஒரு உத்வேகம் இருக்கும். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள் இதோடு இணைக்கப்படும் என கூறினார்.

பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில்  பிரதமர் உரையை முடித்த பிறகு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அனைத்து எம்பிகளும் சென்றனர். நேற்று புதிய நாடாளுமன்றத்தில் மகளிர் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் மசோதா என்ற பெருமையையும் இது பெற்று விட்டது.