இயற்கைக்குப் புறம்பான உறவு.. பலாத்காரம் அல்ல.. ம.பி. ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

Su.tha Arivalagan
May 04, 2024,03:50 PM IST

ஜபல்பூர்: மனைவியுடன் இயற்கைக்குப் புறம்பான வகையில் உறவு வைத்துக் கொண்டால் அதை பாலியல் பலாத்காரமாக கருத முடியாது என்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது.


இந்த வகையான உறவு வைத்துக் கொண்டதற்காக மனைவி கொடுத்த புகாரின் பேரில், கணவர் மீது தொடரப்பட்ட வழக்கையும் ஹைகோர்ட் ரத்து செய்துள்ளது. இருவரும் கணவன் மனைவி. அவர்களுக்குள் நடக்கும் உறவை சட்டவிரோதமானது என்று கருத முடியாது. எனவே கணவர் எந்த மாதிரியான உறவை வைத்துக் கொண்டாலும் அதை பலாத்காரமாக கருத முடியாது என்றும் ஹைகோர்ட் கூறியுள்ளது.


சம்பந்தப்பட்ட நபரின் மனைவி போலீஸில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில் கணவர் தன்னுடன் இயற்கைக்குப் புறம்பான முறையில் உறவு வைத்துக் கொள்வதாக கூறியிருந்தார். இதன் பேரில் அந்தக் கணவர் மீது போலீஸார் பலாத்கார வழக்கைப் பதிவு செய்தனர். இதை எதிர்த்து கணவர் ஹைகோர்ட்டை அணுகினார். அதை விசாரித்த நீதிபதி ஜி.எல். அலுவாலியா அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:




இந்தியன் பீனல் கோட் 377ன் கீழ் இந்த இருவரும் கணவன் மனைவி. இவர்களுக்குள் நடைபெறும் உறவு சட்டத்திற்கு உட்பட்டது. அது எந்த வகையான உறவாக இருந்தாலும் அதை பாலியல் பலாத்காரமாக கருத முடியாது.  எனவே கணவர் மீது தொடரப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்கிறோம். திருமண உறவில் பலாத்காரம் என்பது இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது என்று நீதிபதி கூறியுள்ளார்.