Motivational story: ஜோதிக்கு மட்டுமே தெரியும் அந்த ரகசியம்!

Su.tha Arivalagan
Apr 23, 2023,10:47 AM IST
- மகா

சுள்ளுன்னு அடிச்ச வெயில் ஜன்னல் வழியாக பெட்ரூமை துளைத்துக் கொண்டிருந்தது.. ஜோதி அவசரம் அவசரமாக அலுவலகம் செல்வதற்கு ரெடியாகிக் கொண்டிருந்தாள். வேகம் வேகமாக டிரஸ் சேஞ்ச் செய்தபடியே, 15ஜி பஸ்சை பிடிச்சிடுவேனா.. லேட்டாகுதே என்ற பதற்றத்துடன் படபடத்துக் கொண்டிருந்த அவள் அப்படியே "அத்தை லன்ச் பாக்ஸ் ரெடியா" என்று குரல் விட்டாள். "எடுத்து வச்சிட்டேம்மா.. பொறுமையா கிளம்பு" மெல்லத் தவழ்ந்து வந்தது அத்தையின் பதிலும், கூடவே நிறைய அன்பும்.

என்னடா அத்தைன்னு மாமியாரையா சொல்றாங்கன்னு பல பேருக்கு குழப்பமா இருக்கும்.  என்ன ஒரு ஆச்சரியம் இந்த காலத்துல இப்படி ஒரு மாமியார்,  மருமகளா என்று என்ன தோன்றுகிறதா?  எலியும் பூனையுமாக இருக்க வேண்டிய மாமியார் மருமகளுக்கு இடையே இப்படி ஒரு உறவா?  என்று என்ன தோன்றுகிறதா.. ரொம்ப ஆச்சரியப்படாதீங்க.. ஜோதி அவ்வளவு அன்பானவள்.. அதை விட   பொறுமையானவள்.  அவளது மாமியாரும் ஆரம்ப காலத்தில் ஜோதியை பற்றி தெரிந்து கொள்ளாமல் அவளை கொடுமைப்படுத்தியவர்தான்.. ஆனால் ஜோதியின் கேரக்டரை புரிந்து கொண்ட பிறகு அப்படியே மாறிப் போய் அன்பைக் கொட்ட ஆரம்பித்து விட்டார்.. சரி.. இப்ப கதையைத் தொடருவோம்.

ஒரு வழியாக கிளம்பி பஸ்ஸைப் பிடித்து அரக்கப் பரக்க அலுவலகம் நுழைந்த ஜோதி, பயோமெட்ரிக்கை வைத்த பிறகுதான் படபடத்த நெஞ்சு அமைதியானது.  அப்பாடா கரக்ட் டைம்க்கு வச்சுட்டோம் என்ற ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டபடி சீட்டில் அமர்ந்த ஜோதியை, செல்போன் மணி கலைத்தது. மாமியார்தான் கூப்பிடுகிறார்.

என்னடா இது வீட்டில் இருந்து போன் .. என்று பதற்றத்துடன் போனை அட்டென்ட் பண்ணினாள்.

"ஜோதி,  நம்ம அனு குட்டிக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. பில்ரோத் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோம். உடனே வாம்மா" அத்தையின் பதட்டக் குரலைக் கேட்ட ஜோதிக்கு குபுக்கென்று கண்ணில் கண்ணீர் குவிந்தது. அப்படியே எழுந்து மேனேஜரிடம் ஓடினாள்.  நிலைமையைச் சொல்லி பெர்மிஷன் கேட்டு விட்டு ஹேன்ட்பேக்கை எடுத்தபடி வெளியே வந்து, ஆட்டோ பிடித்து ஹாஸ்ப்பிட்டல் விரைந்தாள்.

அனு.. ஜோதியின் ஆறு வயது மகள் . ஒரு பிரைவேட் ஸ்கூல்ல யுகேஜி படிச்சிட்டு இருக்கா. ஆட்டோவில் ஏறி அமர்ந்ததும் கண்ணீர் ஆறாக பாய்ந்து ஓட ,  மனக்குழப்பத்துடனும் பதற்றத்துடனும் ஹாஸ்பிடலை அடைந்தாள். 

ரிசப்ஷனிஸ்ட்டிடம், "அனு என்ற பேஷண்ட்.. ஆறு வயசு மேம் , எங்க அட்மிட் பண்ணி இருக்காங்க?"

"ஐ சி யு ல இருக்கா. நீங்க பயப்படாதீங்க மேம், பெரிய பிரச்சினை இல்லை" ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார் ரிசப்ஷனிஸ்ட். என்னது ஐசியு ல அட்மிட் பண்ணி இருக்காங்களா? அய்யய்யோ எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று உலகத்தில் உள்ள கடவுள் அனைத்தையும் மனதிற்குள் நினைத்துக் கொண்டு ஐயோ அனுவுக்கு ஒன்னும் ஆகக்கூடாது என்ற பயத்துடனே ஐ சி யு வை நோக்கி  நடந்தாள்  ஜோதி.  




அறைக்கு வெளியே காத்திருந்த மாமியாரிடம் சென்ற ஜோதி, "அனுவுக்கு என்னாச்சு" என்று கேட்க அவர் நடந்ததை விளக்கினார். சற்று நேரத்தில் டாக்டர் வந்தார். "குழந்தைக்கு ரத்தம் நிறைய போயிருச்சு. உடனே நீங்க ரத்தத்துக்கு அரேஞ்ச் பண்ணுங்க. எவ்வளவு சீக்கிரமா நீங்க அரேஞ்ச் பண்றீங்களோ பாப்பா���ோட உயிரை காப்பாத்திடலாம் . அதனால கொஞ்சம் சீக்கிரமா அரேஞ்ச் பண்ணுங்க . நாங்களும் எங்க ஹாஸ்பிடல்ல இருந்து ட்ரை பண்றோம்".

பதட்டம் அதிகரிக்க அடுத்தடுத்து முயற்சிகளில் இறங்கினர். என்ன ஒரு ஆச்சரியம்.. அஞ்சு நிமிஷத்திலேயே அனுவுக்கு தேவையான ப்ளட் கிடைச்சு  அனுவோட உயிருக்கு இனி ஆபத்தில்லை என்றும் டாகட்ர்கள் கூற, அப்படியே ஆசுவாசமாக சீட்டில் சரிந்து உட்கார்ந்தாள் ஜோதி.. அவளது கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர்.. மனசு முழுவதும் ஒரு விதமான நிம்மதி.

மாமியாரும் கண்ணீர் மல்க, "யார் செஞ்ச புண்ணியமோ நல்லவேளை நம்ம பாப்பாக்கு உடனே பிளட் கிடைச்சு அவ உயிர காப்பாத்திட்டாங்க. இனிமே  சிங்கப்பூர்ல இருக்குற என் பையனுக்கு போன் பண்ணி , இப்ப  பாப்பா ரொம்ப நல்லா இருக்கான்னு சொல்லணும்".

ஜோதியின் மனதில் ஒரு ஃப்ளாஷ்பேக். கல்யாணத்திற்கு முன்னர் ஒரு ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்தாள். அப்போது லயன்ஸ் கிளப் சார்பில் ஒரு பிளட் டொனேஷன் கேம்ப் வச்சிருந்தாங்க.அப்போ ஜோதி ரொம்ப ஒல்லியா 38 கிலோ எடை தான் இருந்தாள். அவளுக்கு  அப்போ வயசு 25 . ப்ளட் டொனேஷன்  கேம்ப்புக்குப் போனபோது, அங்கு இருந்த டாக்டர் நீங்க அண்டர் வெயிட்டில் இருக்கீங்க. சோ நீங்க பிளட் கொடுக்க முடியாது என்று சொன்னதும் அப்செட் ஆனாள் ஜோதி. ஆனால் ஜோதி விடவில்லை, எனக்கு பிளட் டொனேட் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு டாக்டர்.  தயவு செய்து நீங்க என் ப்ளட் எடுத்துக்கோங்க என்று மிகவும்  கெஞ்சினாள் ஜோதி. அவளது ஆர்வத்தைப் பார்த் டாக்டரும் ஓகே இந்த ஒரு தடவை மட்டும்னு என்று சொல்லி ரத்தம் எடுக்க உத்தரவிட்டார்.

நர்ஸ் வந்து ஜோதியின் வெயினை தேடி தேடி மிகவும் கஷ்டப்பட்டு, இடதுகை , வலதுகை மறுபடியும் இடது கையிலேயே  வெயினை  கஷ்டப்பட்டு தேடி , பிளட் டொனேட் செய்தாள் ஜோதி. கொஞ்சமாகத்தான் எடுத்தார்கள். ரத்த தானம் செய்து ஒரு ஆப்பிள் ஜூஸையும் அருந்திவிட்டு நிமிர்ந்தபோது, உலக சாதனை செய்தது போல்  ஒரு சந்தோஷம் அவளுக்கு.

நினைவு கலைந்து கண்களை துடைத்தபடி ஐசியூ கதவையே பார்த்தாள் ஜோதி.. முகத்தில் மெல்ல படர்ந்தது புன்னகை..  முற்பகல்  ஜோதி செய்த ரத்த தானமே பிற்பகல் அவள் குழந்தைக்கு உடனடியாக கிடைத்தது. மகிழ்ச்சியில் மனசெல்லாம் லேசாக.. கம்பீரமாக நிமிர்ந்து அமர்ந்தாள்.