சென்னையில் தொடரும் கன மழை.. பெரும்பாலான சுரங்கப் பாதைகள் இயங்குகின்றன.. சில மூடல்!

Manjula Devi
Oct 15, 2024,04:53 PM IST

சென்னை: சென்னையில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் உள்ள முக்கிய சுரங்கப்பாதைகள் இயங்கி வருகின்றன. அதேசமயம், 8 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 
தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்பதால் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று நள்ளிரவில் தொடங்கிய கனமழை தற்போது வரை விட்டு விட்டு பெய்து வருகிறது. 



இந்த கனமழையால் கீழ்கட்டளை, நங்கநல்லூர், ஓஎம்ஆர், வடபழனி, ஆதம்பாக்கம் மடிப்பாக்கம், ராம் நகர், உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அதேபோல் மடிப்பாக்கத்தில் இருந்து கீழ்கட்டளை வரை மெட்ரோ பணிகளுக்கான தூண்கள் அமைக்கப்பட்டு வருவதால் அங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த மழை இன்று மாலை இரவு நேரங்களில் மேலும் தீவிரமடைந்து நாளை மழையின் அளவு அதிகரிக்கும். இதனால் இன்றும் ,நாளையும் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீர் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இருப்பினும் சென்னையில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக,மழைநீர் அதிகரித்து வருவதால் தண்ணீர் வெளியேற்றுவதில்  சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு  தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அதிலும் தற்போது இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகள் மழை வெள்ளத்தால் வேகமாக மூடப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெரம்பூர் ரயில்வே, கணேசபுரம், சுந்தரம் பாயிண்ட், துரைசாமி மேட்லி ஆகிய ஐந்து சுரங்கப்பாதைகள் மழை நீரால் மூடப்பட்டுள்ளன.

வேளச்சேரிக்கு தனி கவனம்

சென்னை வேளச்சேரியில் மழை காலங்களில் எப்போதுமே தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குவது வழக்கம். இப்போதும் அங்கு மழை காரணமாக பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது. இதை சரி செய்ய நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். ராட்சத மோட்டார் பம்புகள் கொண்டு மழை நீர் அகற்றப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

வேளச்சேரியில் நீர் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தனிக் கவனம் கொடுத்து அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கார் வைத்துள்ள பலரும் மேம்பாலத்தில் கொண்டு போய் கார்களை நிறுத்தி வைத்து விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

அதேபோல் சென்னையில் உள்ள முக்கிய சுரங்கப்பாதைகளில் ஒன்றான தியாகராய நகர் துரைச்சாமி சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் எப்போதுமே மழை நீர் தேங்குவது இயல்பு தான். ஆனால் தற்போது  தொடர் மழை பெய்தாலும் சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை. வழக்கம்போல வாகனங்கள் சென்று வருகின்றன. போர்க்கால அடிப்படையில் இங்கு நடவடிக்கைகள் எடுத்து வருவதால் இப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுரங்கப் பாதைகளைப் பொறுத்தவரை உடனுக்குடன் தண்ணீர் எடுத்து விடப்படுவதால் இதுவரை பெரிய அளவில் பிரச்சினை ஏதும் வரவில்லை. நாளை பெரிய மழை பெய்யும்போதுதான் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும். இருப்பினும் அதையும் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசும், மாநகராட்சியும், காவல்துறையும், தீயணைப்புத் துறையும் எடுத்துள்ளன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்