மொராக்கோவை உலுக்கிய பயங்கர பூகம்பம்... 300க்கும் மேற்பட்டோர் பலி

Su.tha Arivalagan
Sep 09, 2023,09:26 AM IST
மரகேஷ், மொராக்கோ: மொராக்கோ நாட்டில்  இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மிகப் பெரிய பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மரகேஷ் என்ற நகரம் பூகம்பத்தில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்கு வீடுகள் இடிந்து நொறுங்கி விட்டன. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன. நகரமே அலங்கோலமாகியுள்ளது.

மொராக்கோவை தாக்கிய பூகம்பத்தின் அளவு 6.8 ரிக்டர் என்று அமெரிக்க பூகம்பவியல் கழகம் தெரிவித்துள்ளது. இதுவரை 300 பேர் வரை இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 



பூகம்பத்தின் பாதிப்பு அதிகம் இருப்பதால் உயிர்ப்பலி உயரும் என்று அஞ்சப்படுகிறது. மரகேஷ் மட்டுமல்லாமல், ஓகாய் மெடன் என்ற நகரிலும் கூட பூகம்ப பாதிப்புகள் உள்ளன. பூமிக்கு அடியில் 18.5 கிலோமீட்டர் அளவில் பூகம்பத்தின் மையப் பகுதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. 

மரகேஷ் என்பது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பழமையான நகராகும். பூகம்பத்தில் சிக்கி ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்படலாம் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக வீடுகளை விட்டு தெருவில் குழுமியுள்ளனர்.