எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.. ஒரு குழந்தை கூட பசியுடன் வரக் கூடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஒரு குழந்தை கூட பசியுடன் வரக் கூடாது என்று முதல்வர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் 18 லட்சத்து 50 ஆயிரம் அரசு பள்ளிகள் பயன் அடைந்து வருகின்றனர். இந்தக் காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளுக்கு மட்டும் தானா என்று அரசு உதவி பெறும் பள்ளிகள் கோரிக்கை விடுத்த நிலையில், இன்று கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 3665 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 2,23,536 குழந்தைகள் பயன்பெறுகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் துவங்கி வைத்தார். குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார். அவரும் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மிக மிக மகிழ்ச்சியாக தான் உங்கள் முன்னாடி நின்று கொண்டிருக்கிறேன்.அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஆனால் பள்ளிக்கு ஒரு குழந்தைகள் கூட பசியோடு வரக்கூடாது என்று முடிவெடுத்து தான் இத்திட்டம் தொடங்க உத்தரவிட்டேன். இரண்டு வருடத்திற்கு முன்பு பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினேன். அதேபோல் இன்று காமராஜர் பிறந்த நாள் அன்று இத்திட்டத்தை விரிவுபடுத்தி உள்ளேன்.
அரசு பள்ளிக்கு மட்டும் தானா இத்திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இத்திட்டம் கிடையாதா என பள்ளி மாணவர்கள் வலியுறுத்தியதை அடுத்து 18 லட்சத்து 50 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் வயிறார சாப்பிட காரணமான இத்திட்டத்தை இன்று விரிவுபடுத்தி இருக்கிறேன். இனி அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2.23 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் காலை உணவை சாப்பிடுவார்கள். ஏழை எளிய மாணவர்களுக்கு உணவளிப்பதன் மூலம் குழந்தைகளின் பசிப்பிணியை போக்கி அவர்கள் நலமான வளமான அறிவுமிக்க சமூகமாக வளர்க்கிறோம். ஏனென்றால் குழந்தைகள் தான் தமிழ்நாட்டின் எதிர்காலம்.
இந்த காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது. பெற்றோர்களுக்கு பொருளாதார சுமையை குறைக்கிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது. இப்படி ஏராளமான நன்மைகள் காலை உணவு திட்டத்தினால் விளைகிறது. நாள்தோறும் மக்களுக்கான நலத்திட்டங்கள், தமிழ்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான செயல்பாடுகள், என தொடர்ந்து செய்தும் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
குறிப்பாக இந்த காலை உணவு திட்டம் நம்முடைய திராவிட மாடல் ஆட்சிக்கு நீடித்த புகழை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இத்திட்டத்தை நாம் தொடங்கிய பிறகு தான் இந்தியாவில் பல மாநிலங்களில் இது போன்ற திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். குறிப்பாக கனடா போன்ற நாடுகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் படிப்பதற்கு எந்த வித தடை வந்தாலும் அதனை உடைப்பது தான் எங்களுடைய கடமை.
நீட் தேர்வு வேண்டாம் என நான் குரல் கொடுத்த போது ஏன் வேண்டாம் என சொல்கிறீர்கள் என பலர் கருத்து தெரிவித்தார்கள். ஆனால் இன்று நீட் தேர்வினால் எழும் முறைகேடுகளால் உச்ச நீதிமன்றமே கேள்வி எழுப்புகிறது. இது தவிர பல்வேறு அரசியல் தலைவர்களும், தேசிய கட்சிகளும், மாணவர்களும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஏன் ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழ்நாட்டு வழியில் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.
கல்விதான் திருட முடியாத சொத்து. அந்த சொத்தை தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றாக வேண்டும். மாணவி செல்வங்களே.. படிங்க, படிங்க.. உயர படிங்க. நீங்க உயர உங்கள் வீடும் உயரும். இந்த நாடும் உயரும் என கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வழங்கும் உணவுகளில் துளி கூட தரம் குறையக்கூடாது.அதேபோல் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் உணவுகளை தரத்துடனும், தனி கவனமுடனும் வழங்க அனைத்து அதிகாரிகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.