என்ன நடக்குது நாட்டுல.. ஒரே விமானத்தில் இத்தனை கடத்தல்காரர்களா??
சென்னை: ஓமன் நாட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகளிடம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓமன் நாட்டு விமானம் 186 பயணிகளுடன் சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தது. இந்த விமானம் ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து பயணிகள் ஏற்றி வந்துள்ளது. விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
தகவலின் பேரில் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 110க்கும் மேற்பட்ட பயணிகளை வெளியில் செல்ல விடாமல் விமான நிலையத்தில் தனி அறைக்குள் அழைத்துச்சென்று முழுமையாக சோதனை செய்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 4 மணி வரை நடந்தது.
சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையில் 60க்கும் மேற்பட்டோர் கடத்தல் தங்கத்துடன் இருந்தது தெரிய வந்தது. தங்கம்மட்டுமல்லாமல், 120 ஐபோன்கள், 84 ஆண்ட்ராய்டு போன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், லேப்டாப்புகள் என மறைத்து வைத்திருந்தனர். கடத்தப்பட்டு வந்த தங்கம் மட்டும் மொத்தம் 13 கிலோ ஆகும்.
அனைத்துப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அபராதம் கட்டுமாறும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மீண்டும் கடத்தலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்கா இலாகாவினர் எச்சரிக்கை விடுத்தனர்.
ஒரே விமானத்தில் வந்த 60க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து தங்கம், ஐபோன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரிய அளவில் கடத்தல் தங்கம் பிடிபட்டதால் இதில் ஏதாவது பெரிய அளவிலான நெட்வொர்க் இருக்குமா என்ற விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.