கொளுத்தும் வெயில்.. இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம்.. 1000 ஐ கடந்த ஹஜ் பயணிகள் மரணம்!

Aadmika
Jun 20, 2024,04:43 PM IST

ரியாத்: சவுதி அரேபியாவில் வாட்டி வதைக்கும் கடுமையான வெயில் காரணமாக ஹஜ் புனித யாத்திரை சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 68 பேர் இந்தியர்கள் என சொல்லப்படுகிறது.


அரபு நாடுகளில் மிக அதிகமான வெப்பநிலை நிலவி வருகிறது.இந்நிலையில் ஏராளமானோர் அங்கு ஹஜ் பயணிகளாக சென்றுள்ளனர். இவர்களில் வெப்பம் தாங்க முடியாமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிதாக வெளியான தகவலின் படி, இது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளது.




உயிரிழந்தவர்களில் 58 பேர் எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள் 68 பேர் இந்தியர்கள் என தெரிய வந்துள்ளது. அரபு நாடுகளை சேர்ந்த 658 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 630 பேர் முறையாக பதிவு செய்யாமல் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சவுதி ஆய்வு நிறுவனங்கள் கடந்த மாதமே, இந்த ஆண்டு வழக்கத்தை விட ஹஜ்ஜில் வெப்பம் கூடுதலாக இருக்கும் என எச்சரித்திருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 0.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்திருப்பதாகவும், பருவநிலை மாற்றம் காரணமாக இந்த வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டிருந்தது. 


உயிரிழந்தவர்கள் தவிர 2000 க்கும் அதிகமான யாத்திரீகர்கள் வெப்பம் தொடர்பான பாதிப்புகளை எதிர் கொண்டுள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவை சேர்ந்த 240 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஹஜ் யாத்திரை வரும் பயணிகள் குடைகளை பயன்படுத்துமாறும், நீரின் அளவு உடலில் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், வெப்பம் அதிகமாக இருக்கும் சமயத்தில் வெளியே வராமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். 


முறையாக பதிவு செய்யாமல் பலரும் ஹஜ் யாத்திரை வருவதும் யாத்திரீகர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதற்கு பெரும் சவாலாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தோனேஷியா, ஈரான், செனகல் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.