கர்நாடகத்திலிருந்து 1,17,000 கன அடி நீர்.. காவிரியில் வெள்ளம்.. 100 அடியைத் தாண்டப் போகும் மேட்டூர்!

Manjula Devi
Jul 26, 2024,05:14 PM IST

சேலம்:   கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 1,16, 900 கன அடி தண்ணீர் திறந்து விடுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து தற்போது 92.62 அடியாக நீர்மட்டம் உள்ளது. விரைவில் அணையின் நீர் மட்டம் 100 அடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த ஒரு மாதமாக கன மழை கொட்டி தீர்த்தது. இருப்பினும் கடந்த சில நாட்களாக மழையின் அளவு குறைந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக பெலகாவி, சிக்கோடி, நிப்பான் கிட்டூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக கிருஷ்ண ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.




கர்நாடக அணைகள் நிரம்பின:


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால் கே ஆர் எஸ் மற்றும் கபினி அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. கேஆர்எஸ் மற்றும் கபினி அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கபினி அணையிலிருந்து 16,900 கன அடி தண்ணீர் தண்ணீரும், கே ஆர் எஸ் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இது தவிர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 56,000 கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது 70,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 11-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் ஒக்கேனக்கல் காவிரியில் இருந்து  வினாடிக்கு 70,000 கன அடி தண்ணீர்  திறந்து விடப்படுவதால் தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 32,693 கன அடியில் இருந்து 45,598 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர் இருப்பு 55.697  டிஎம்சி உள்ளது. குடிநீர் தேவைக்காக ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு தற்போது நீர்வரத்து மேலும் அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 92.62 அடியாக அதிகரித்துள்ளது. விரைவில் 100 அடியை நெருங்க இருக்கிறது.