மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ் பதவியேற்றார்.. பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு

Su.tha Arivalagan
Dec 13, 2023,04:09 PM IST

- மஞ்சுளா தேவி


போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் இன்று பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.


இதே நிகழ்ச்சியில் துணை முதல்வர்களாக ராஜேந்திர சுக்லா மற்றும் ஜெகதீஷ் தேவ்டா ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.


சமீபத்தில் ஐந்து மாநிலங்களில்  சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் மத்திய பிரதேசத்தில் பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் வெறும் 64 இடங்களை மட்டுமே வென்று தோல்வியைத் தழுவியது. மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே மூன்று முறை சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக இருந்தவர். இவரை நீக்கிவிட்டு புதிய முதல்வராக மோகன் யாதவை நியமித்துள்ளனர் .




உஜ்ஜைனி  தெற்கு தொகுதி எம்எல்ஏவான மோகன்  யாதவ் இன்று பதவியேற்றுக் கொண்டார். போபாலில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, கத்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


58 வயதான மோகன் யாதவ், பிஎஸ்சி ,எல்எல்பி , எம்பிஏ மற்றும் பிஎச்டி உள்ளிட்ட பல பட்டங்களை பெற்றுள்ளார். இவர் உஜ்ஜைனி தெற்கு தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சீனியர்கள் பலர் இருக்க, அவர்களை ஒதுக்கி விட்டு மோகன் யாதவுக்கு முதல்வர் பதவி தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.