மக்கள் நீதி மய்யம்.. 7வது ஆண்டு தொடக்க விழா.. பிரமாண்டமாக கொண்டாடுவோம்.. கமல் தலைமையில் தீர்மானம்!

Manjula Devi
Jan 23, 2024,05:40 PM IST

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ஆண்டு துவக்க விழாவினை பிரம்மாண்டமாக நடத்த கட்சியின்  செயற்குழு கூட்டத்தில் இன்று முடிவெடுக்கப்பட்டது.


கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாக குழு மற்றும்  செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் முன்மொழிபட்டு நிறைவேற்றப்பட்டன.


குறிப்பாக  தேசிய வாக்காளர் தின தினத்தன்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விரிவான பிரச்சாரங்களை மேற்கொள்ள போவதாகவும், காலநிலை மாற்றத்தின் காரணமாக மக்கள் நீதி மய்ய பேரிடர் மீட்பு குழு உருவாக்கப் போவதாகவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.



மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுவில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


1. மக்கள் நீதி மையம் கட்சியின் ஏழாவது ஆண்டு துவக்கி விழாவினை பிரம்மாண்டமான அளவில் நடத்த தீர்மானிக்கப்படுகிறது.


2. மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி மாத இறுதியில் நடத்த தீர்மானிக்கப்படுகிறது.


3. தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு மக்கள் நலன்களுக்கு உகந்த மக்கள் நீதி மையத்தின் கொள்கைகளுக்கு ஒத்துவரக்கூடிய தேர்தல் வியூகங்களை உருவாக்க தகுதி சால் உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க நிர்வாக குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.


4. மாற்றுத்திறனாளிகள் வாழ்வு மேம்பாட்டிற்காக மக்கள் நீதி மையம் ஆற்றி வரும் பணிகளை வலுப்படுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகள் அணி உருவாக்க தீர்மானிக்கப்படுகிறது.


5. கால நிலை மாற்றத்தின் கோர விளைவுகளை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் எதிர்கொண்டு வருவதை மனதிற்கு கொண்டு மண்டல வாரியாக மக்கள் நீதி மைய பேரிடர் மீட்பு குழு உருவாக்க தீர்மானிக்கப்படுகிறது.


6. ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் ஒவ்வொரு தேசிய வாக்காளர் தினத்தின்போதும் நமது தலைவர் நம்மவர் அவர்கள் வீடியோக்கள் வாயிலாகவும் அறிக்கைகள் வாயிலாகவும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார். இளைஞர்கள் அவசியம் வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டும் என்பதே அவர் கலந்து கொள்ளும் கல்லூரி விழாக்களில் வலியுறுத்தி வருகிறார். தலைவரின் வழிகாட்டுதல் படி மக்கள் நீதி மையத்தின் உறுப்பினர்கள் தேசிய வாக்காளர் தினத்தன்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விரிவான பிரச்சாரங்களை களத்திலும் சமூக ஊடகங்களிலும் மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.


7. நமது தலைவர் அவர்களின் சிந்தனைகளின் தொகுப்பாக வெளியாகி இருக்கும் மையம் தேர்ந்தெடுத்த படைப்புகள் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. கமல் பண்பாட்டு மையத்தின் இம்முயற்சியை நிர்வாக குழு மற்றும் செயற்குழு பாராட்டுகிறது.


தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பார் கமல்ஹாசன்?


இதற்கிடையே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் எதிர்பார்ப்புகள் உள்ளன. யாருடன் கமல்ஹாசன் கூட்டணி வைப்பார், கமல்ஹாசன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.


கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே ஒரு செய்தி ஓடிக் கொண்டுள்ளது.  திமுகவுடன் கூட்டணி வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடலாம், அதுவும் கமல்ஹாசனே போட்டியிடலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.


கமல்ஹாசன் கோவை அல்லது ராமநாதபுரம் அல்லது தென் சென்னை ஆகிய தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.. இருப்பினும் தேர்தல் தொடர்பாக இதுவரை கமல்ஹாசன் தரப்பிலோ, திமுக தரப்பிலோ எந்தவிதமான செயல்பாடுகளும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.