சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சிமொழியாக்குங்கள்.. ஸ்டாலின் கோரிக்கை
Mar 25, 2023,03:02 PM IST
மதுரை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூடுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தலைமை நீதிபதி சந்திரசூட் அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசுகையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 8 லட்சம் தீர்ப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழ் மொழியை சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் ஆட்சிமொழியாக்க தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதித்துறையில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்த திமுக அரசு தீவிரமாக பாடுபட்டு வருகிறது. நீதிமன்றங்களின் வசதிகளை அதிகரிக்க அரசு தீவிர அக்கறை காட்டும்.
சுப்ரீம் கோர்ட்டின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அதை சுப்ரீம் கோர்ட் பரீசிலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட நீதிக்கும், சமூக நீதிக்கும் நீதித்துறை முழு அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 44 கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.