கும்மிடிப்பூண்டியைத் தாண்டி ஸ்டாலினை யாருக்குமே தெரியாது.. அண்ணாமலை அதிரடி!

Su.tha Arivalagan
Mar 03, 2023,02:38 PM IST
சென்னை: கும்மிடியைப்பூண்டியைத் தாண்டி இவரை யாருக்குமே தெரியாது.. ஆனால் தன்னைத் தானே தேசியத் தலைவர் என்று கூறிக் கொள்கிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.



ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதிமுக 2வது இடத்தைப் பெற்று டெபாசிட்டை தக்க வைத்துக் கொண்டது. இவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற அனைத்து வேட்பாளர்களின் டெபாசிட் தொகையும் பறி போனது.


"எப்பவும் எனக்குத்தான்".. காதலியுடன் கலக்கல் போட்டோ வெளியிட்ட.. வீராங்கனை டேனியல் வியாட்!


இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக சாடியுள்ளார் அண்ணாமலை. நேற்று சென்னையில் நடைபெற்ற தனது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தானும் ஒரு தேசிய தலைவர்தான், நானும் தேசிய அரசியலில் இருக்கிறேன் என்று கூறியிருந்தார். இதை வைத்து கடுமையாக சாடியுள்ளார் அண்ணாமலை.

இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்:

கும்மிடியைப்பூண்டியைத் தாண்டி அவரை யாருக்குமே தெரியாது. ஆனால் தன்னைத் தானே தேசியத் தலைவர் என்று கூறிக் கொள்ளும் இந்தத் தலைவர், கடந்த 22 மாதங்களில் செய்த  ஒரே சாதனை தனது மகனை அரசியலில் பதவி கொடுத்து உயர்த்தியதுதான்.

இவரது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகக் கிடந்தன. மேடையும் காலியாகவே கிடைத்தது. அதேபோல அவர்கள் போட்ட கூச்சலும் வெற்றுக் கூச்சல்தான். கே.சந்திரசேகர ராவ் வரவில்லை. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவில்லை. இடதுசாரி தலைவர்கள் பலரும் வரவில்லை.. அல்லது அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதாக கூறிக் கொள்கிறார் ஸ்டாலின்.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி பேரழிவை சந்தித்துக் கொண்டே உள்ளது. அவர்கள் ஈரோடு கிழக்கில் பெற்ற வெற்றி, இயல்பானதல்ல.. மாறாக  விலை கொடுத்து வாங்கப்பட்டது. போராடிப் பெற்ற வெற்றி அல்ல அது.

ஒரு முதல்வராக எந்த சாதனையையும் முதல்வர் ஸ்டாலினிடம் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் மிக மிக விவரமானவர்கள். முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரியாத எல்லாமே தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும் என்பதை அவரிடம் யாராவது சொன்னால் நல்லது.

ராகுல் காந்தியைப் போலவே தலையில் ஒன்றுமில்லாதவராக உருவெடுத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ராகுல் காந்தியுடன் போட்டியிடுவதை அவர் நிறுத்திக் கொள்ளட்டும் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.