"இந்தியா 65 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகும்".. வைரலான மார்ஷ் கணிப்பு.. கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

Su.tha Arivalagan
Nov 18, 2023,05:47 PM IST

அகமதாபாத்: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 65 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி விடும் என்று ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் மிட்சல் மார்ஷ் கூறியுள்ளார். இது இந்திய ரசிகர்களிடையே கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அவரை ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.


உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இதில் மோதவுள்ளன. இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளுமே முன்னாள் சாம்பியன்கள்தான். 


இந்தியா வென்றால் அந்த அணிக்கு இது 3வது உலகக் கோப்பை. ஆஸ்திரேலியா வென்றால் அதற்கு 6வது உலகக் கோப்பை. இந்த நிலையில் ஆஸ்திரேலியா ஆல் ரவுண்டர் மிட்சல் மார்ஷ் முன்பு கூறியிருந்த ஒரு கணிப்பு வைரலாகி வருகிறது.




உலகக் கோப்பை குறித்து இந்த ஆண்டு மே மாதம் மிட்சல் மார்ஷ் கருத்து தெரிவித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில் இறுதிப் போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெறும். ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 450 ரன்களைக் குவிக்கும்.  இந்தியா 65 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகும். ஆஸ்திரேலியா கோப்பையை வெல்லும் என்று கூறியிருந்தார் அவர்.


அவர் சொன்னபடி இறுதிப் போட்டிக்கு இரு அணிகளும் தகுதி பெற்றுள்ளதால், மார்ஷ் கணிப்பு இப்போது வைரலாகி வருகிறது. ஆனால் இந்திய ரசிகர்கள், மார்ஷை கழுவிக் கழுவி ஊற்றி வருகின்றனர். இந்தத் தொடரில் தோல்வியே காணாத அணியாக இந்தியா வலம் வந்தது. ஆனால் ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியிலேயே இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது. அடுத்த போட்டியிலும் அது தோல்வியைத் தழுவியது. அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் தட்டுத் தடுமாறித்தான் வெல்ல முடிந்தது.


ஆனால் இந்தியா எந்தப் போட்டியிலும் சிரமப்படவில்லை. மாறாக அட்டகாசமான முறையில் அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது என்று ரசிகர்கள் குத்திக் காட்டி மார்ஷை துவம்சம் செய்து வருகின்றனர்.