இதுக்குப் பேர்தான் ஆஸ்திரேலியத் திமிரோ.. காலை எங்க வச்சிருக்கார் பாருங்க மார்ஷ்!

Su.tha Arivalagan
Nov 20, 2023,08:10 PM IST

மும்பை: இந்தியாவைத் தோற்கடித்துப் பெற்ற உலகக் கோப்பை மீது கால் மேல் கால் வைத்து ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷ் அமர்ந்திருக்கும் புகைப்படம் பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இதுக்குப் பேர்தான் ஆஸ்திரேலியத் திமிர் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


2023 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்தத் தொடரில் இந்தியா 10  தொடர் வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேபோல 8 தொடர் வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு வந்து சேர்ந்தது.


அகமதாபாத்தில் நேற்று அனல் பறக்க நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி சிறப்பாக விளையாடியது. முதலில் பந்து வீச்சு, பீல்டிங்கில் அசத்தினர். பின்னர் சேசிங்கிலும் மிரட்டி விட்டனர். 140 கோடி இந்தியர்களின் கனவைத் தகர்த்து உலகக் கோப்பையைத் தட்டிச் சென்றனர் ஆஸ்திரேலியா வீரர்கள்.




நம் கனவு தகர்ந்தாலும், நல்ல கிரிக்கெட் வென்றது என்ற மகிழ்ச்சியில் இந்தியர்களும் கூட ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துச் சொல்லி மகிழ்ந்தனர். ஆனால் ஆஸ்திரேலியா தனது குசும்பை வெளிக்காட்டியுள்ளது.


அதாவது அந்த அணியின் வீரர் மிட்சல் மார்ஷ் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் என்ன இருக்கிறது என்றால்,, எதிரில் உள்ள டேபிள் மீது உலகக் கோப்பையை வைத்துள்ளனர். அதன் மீது மார்ஷ் தனது காலை வைத்து கால் மீது போட்டபடி ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கிறார். இதன் மூலம் மார்ஷும், ஆஸ்திரேலிய அணியும் என்ன சொல்ல வருகிறார்கள் என்று தெரியவில்லை.. உலகக் கோப்பையெல்லாம் எங்க கால் தூசிக்குச் சமம் என்கிறார்களா.. அல்லது இதெல்லாம் ஒரு கோப்பையா என்று கேலி செய்கிறார்களா.. அல்லது இதுக்குப் போயா நீங்கெல்லாம் உயிரைக் கொடுத்து உங்க அணிக்கு சப்போர்ட் செய்தீர்கள் என்று இந்தியர்களைப் பார்த்து கேலியாக கேட்கிறார்களா.. !


ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை அவர்களின் உண்மையான "நிறம்.. குணம்" உலகம் அறிந்தது தான்.. ஆனால் இப்படி பட்டவர்த்தனமாக ஒரு கோப்பையை அவமதிக்கும் வகையில் அமர்ந்து போஸும் கொடுத்திருப்பது நிச்சயம் அநாகரீகமானது மட்டுமல்லாமல்.. திமிரானதும் கூட. உங்களது அருமையான விளையாட்டுக்காக உங்களை மதிப்போர் பலர் உள்ளனர்.. அவர்களில் பலரும் உங்கள் நாட்டவர் கிடையாது. அவர்களுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும்.. இதுபோன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடக் கூடாது.. இப்படித்தான் ஆஸ்திரேலியாவுக்கு அறிவுரை சொல்லத் தோன்றுகிறது.. ஆனால் கேட்டாதானே.. ஆஸ்திரேலியத் திமிரை மாற்றும் மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை!