உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு.. எதிர்ப்பு தெரிவித்த.. கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜ்

Manjula Devi
Aug 01, 2024,02:57 PM IST

வயநாடு:  கேரளாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே நிலச்சரிவுக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய நிலையில், அவரது பேச்சு துரதிருஷ்டவசமானது. மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் அனைத்து தகவல்களும் உள்ளன என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் விளக்கியுள்ளார்.


கேரளா வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது‌. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பலர் அடையாளம் தெரியாமல் இருப்பதால் அவர்கள் யார் என்று தெரியாத சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் காயங்களுடன் ஆயிரம் பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




இதற்கிடையே நாடாளுமன்ற ராஜ்யசபாவில் இதுகுறித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா கேரள மாநிலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்கூட்டியே நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் கேரள அரசு முறையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என கூறியிருந்தார். இதற்கு கேரள முதல்வர் பிரணராயி விஜயன் அப்படி எந்த தகவல்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட அன்றுதான் கேரளாவிற்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது எனக் கூறியிருந்தார். 


இந்த நிலையில் கேரளா சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து இன்று விளக்கியுள்ளார். அவர் கூறுகையில்,  அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு துரதிர்ஷ்டவசமானது மற்றும் தவறானது. மத்திய அரசின் அனைத்து அலர்ட் செய்திகளையும் முழுமையாக சரி பார்த்தோம். அதேபோல் வானிலை மையத்தில் இருந்து அனைத்து தகவல் தொடர்புகளையும் நாங்கள் சரி பார்த்துள்ளோம். எங்களுக்கு முன்கூட்டியே ரெட் அலர்ட் எச்சரிக்கை எதுவும் வரவில்லை. நிலச்சரிவுக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையையும் மத்திய அரசு வெளியிடவில்லை.


எங்களுக்கு வந்ததெல்லாம் ஆரஞ்சு அலர்ட்தான். மழையின் தீவிர தன்மை குறைவாக இருந்ததால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.  அதனால் மாவட்ட நிர்வாகம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையின் அடிப்படையில் தான் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அங்கு வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தோம் என கூறியுள்ளார்.