நமீதா வேதனைப்பட வேண்டாம்.. விசாரிப்போம்.. நடவடிக்கை எடுப்போம்.. அமைச்சர் சேகர்பாபு

Meenakshi
Aug 27, 2024,06:50 PM IST

சென்னை:   மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகை நமீதாவின் மனம் புண்படும்படி, சட்டத்திற்குப் புறம்பாக ஏதேனும் நடந்திருந்தால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். நமீதா வருத்தப்பட வேண்டாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


பாஜக உறுப்பினரும், நடிகையுமான நமீதா கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்குள்ள அதிகாரி ஒருவர் தன்னிடம் நீங்கள் எந்த மதம் என்றும், இந்து மதம் என்றால் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டதாக புகார் தெரிவித்துள்ளார். 




இது குறித்து நமிதா பேசுகையில், நான் நிறைய கோவிலுக்கு சென்று இருக்கின்றேன். யாரும் என்னை இப்படி கேட்டது இல்லை. அப்போது அந்த அதிகாரி ரொம்ப ரூடா, அசிங்கமா, ரொம்ப அரகண்டா பேசினாங்க. உங்க மதம் என்ன அதுக்கு சர்டிபிகேட் காமிங்கன்னு கேட்டாங்க.  இன்னக்கி வரைக்கும் யாரும் என்கிட்ட இப்படி கேட்து இல்லை. ஏன்னா இந்தியாவில இருக்குற எல்லாருக்கும் தெரியும். பிறப்பால் நான் ஒரு இந்து என்று. என்னுடைய கல்யாணம் கூட திருப்பதியில தான் நடந்தது. என் குழந்தையோட பேரு கூட கிருஷ்ணா, அதித்யா தான். ஒரு பெரிய அதிகாரியாக இருக்கும் அவங்களுக்கு ஒரு பிரபலமானவர்கள் கிட்ட எப்படி பேசனும்னு தெரியல. அது எனக்கு சரியாக தோன்றலை. இதற்கு ஒரு சரியான நடவடிக்கை எடுக்கனும்னு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.


இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், பிரபலங்கள் கோவிலுக்கு வரும்போது, சந்தேகம் இருந்ததால் கோயில் பணியாளர்கள், அவர்கள் சார்ந்த மதம் குறித்து கேட்பது உண்டு. அந்த வகையில், பணியில் இருந்த பொறுப்பு அதிகாரி நடிகை நமீதாவிடம் கேட்டு உள்ளார். இது வழக்கமான நடைமுறையே என்று விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.


இந்நிலையில், இன்று அமைச்சர் சேகர்பாபுவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளிக்கையில், ஏற்கனவே பழனி கோயிலில் ஒரு பிரச்சனை தொடர்பாக வந்த தீர்ப்பின் அடிப்படையில் நமிதா இஸ்லாமியராக இருக்கக்கூடும் என்பதால் நேற்றைய சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


நமீதாவின் மனம் புண்படும்படியோ, சட்டத்திற்கு புறம்பாகவோ ஏதேனும் நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நமிதா வருத்தப்பட வேண்டாம் அப்படி அவர் வருத்தப்படுவதாக இருந்தால் அதற்காக நாங்கள் எங்களின் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


முருகன் மாநாட்டில் எவ்விதமான அரசியலும் இல்லை 




பழனியில் நடந்த முத்தமிழ் முருகன் மாநாடு குறித்த கேள்விக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளிக்கையில், மீண்டும் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துமா என கேட்கிறார்கள். முருகனின் ஆசியும் முதல்வரின் உத்தரவு கிடைத்தால் இந்த மாநாடு நடத்தப்படும். திராவிட மாடல் ஆட்சியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அனைத்து சமுதாயத்தினரையும் இரு கண்களாகவும் இரு கரங்களாகவும் பார்க்கிறார். பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் கூட எல்லோருக்கும் எல்லாம் என்றே முதலமைச்சர் பேசினார். நேரமின்மை காரணமாகத்தான் அவர் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த ஆட்சியை பொருத்தவரை இன்னார் இனியவர் என்று இல்லை அனைவரின் ஆதரவோடு ஒட்டுமொத்தமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் சிறப்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறார்கள். 


இது மாவட்ட மாநாடு, மாநில மாநாடு அல்ல உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் அறிஞர்கள் கலந்து கொண்ட மாநாடு.  ஆன்மீகத்தை கையில் எடுக்காமல் ஆட்சி செய்ய முடியாது. சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக தலைவராக இருந்த எல். முருகன் வேலை கையில் எடுத்தார். அப்போது மக்கள் என்ன தீர்ப்பு கொடுத்தார்கள். ஒரு கருத்து வருகிறது என்றால் அந்த கருத்து யாரிடமிருந்து வருகிறது என்பதை பொறுத்து தான் கருத்து சொல்ல முடியும். கடந்த சட்டமன்றத் தேர்தல் வேலை ஏந்திக்கொண்டு பாஜகவினர் ஊர் ஊராகச் சென்றார்கள். ஆனால், மக்கள் அளித்து தீர்ப்பு வேறாக இருந்தது.


திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்த பின் முதல் கடவுள் முருகரே பிற தெய்வங்களின் ஆசியோடு மாநாடு நடத்த வேண்டும். பாஜகவினருடைய கருத்துக்களை புறக்கணித்து சிறப்பான முறை ஆட்சி நடத்தியதால் தான் 2024 தேர்தலில் மீண்டும் அவருக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. ஆன்மீகம் வேறு அரசியல் வேறு. மாநாடு சிறப்பாக நடந்து விட்டது என்ற வயிற்றெரிச்சில் கூட சில பேர் பேசலாம்.முருகன் மாநாட்டில் எவ்விதமான அரசியலும் இல்லை. இது வரலாற்றில் ஒரு மைல் கல். முருகன் மாநாட்டை புதிதாக கையில் எடுத்தது போல் சிலர் கூறுகின்றனர். சமயசார்பற்றதாக முருகன் மாநாடு விளங்கியது என்றார்.


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்து அறநிலைத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் மாநாடு கடந்த 24 மற்றும் 25ம் தேதிகளில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாடு பழனி ஆண்டவர் கலை கல்லூரியில் பிரமாண்ட அளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 5 ஆய்வகங்களில் 1300 பேர் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்க பட்டன.30க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள், ஆதீனங்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.மாநாடு நிறைவு நாளில் 21 தீர்மாவங்கள் நிறைவேற்றப்பட்டன. இது அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்பட்ட ஆன்மீக மாநாடு என்று பாஜகவை சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்