Senthil Balaji Vs Edappadi Palanisamy.. வார்த்தைப் போரில் குதித்த செந்தில் பாலாஜி, அதிமுக!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அதிமுகவுக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அதிமுக தகவல் தொழில்நுட்ப விங்குக்கும் இடையே ஒரு வார்த்தைப் போர் வெடித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்..
பழனிசாமி அவர்கள் தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கை கூட விட்டுவிடலாம்; தனது பதவி நிலைத்திருக்க வேண்டும் எனும் சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடமானம் வைத்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்.
புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி என்பது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும்..
அடிமைக் கூட்டத்திற்கு லாவணி பாடாதவர்களுக்கு எல்லாம் ஏதாவதொரு முத்திரை குத்தி அவர்களைக் காலி செய்வதற்காக எந்தவொரு லாபியும் செய்யத் தயங்காத பதவி வியாபாரி பழனிசாமி மற்றவர்களைப் பார்த்து வியாபாரி என்று சொல்வதுதான் நகைமுரண் என்று அவர் கூறியிருந்தார்.
அதிமுக ஐடி விங் பதிலடி
செந்தில் பாலாஜியின் இந்த அறிக்கைக்குக அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப விங் ஒரு பதிலடி அறிக்கை கொடுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தன்னுடைய நிழலை பார்த்து தானே பயப்படும் உயிரினம் போல அமாவாசை என்றாலே தான்தான், தன்னைத்தான் குறை கூறுகிறார்கள் என உணர்ந்ததால் பொங்கி பொருமி கொண்டிருக்கும் 10 ரூபாய் பாட்டில் புகழ் புழல் தியாகி செந்தில் பாலாஜி அவர்களே!
பல கட்சி மாறி,உருண்டு சென்று,மண் சோறு சாப்பிட்டு தலையில் அலங்காரம் செய்து அலங்கோலமாக திரிந்து தற்போது ஆட்சி அதிகாரம் உள்ள இடத்தில் கொத்தடிமைகளில் ஒருவராக தஞ்சம் புகுந்து,பிணையில் தற்காலிக அமைச்சராக இருக்கும் நீங்கள்தான் சுயநலத்தின் மொத்த உருவம்.
பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் பைனாப்பிள் கேசரி வரை புகழ் பெற்று தற்போது தியாகியாக பதவி உயர்வு பெற்ற உங்களை அரசியல் வியாபாரி என்று சொல்லாமல் வேறு யாரை சொல்ல முடியும்.
அரசியல் அதிகாரம் மற்றும் பதவி சுகத்திற்க்காக இங்கிருந்து அங்கு தாவி,அங்கிருந்து இங்கு தாவி எந்தவொரு எல்லைக்கும் செல்ல தயங்காத உங்களை போன்றோருக்கு அதிமுகவை பற்றியோ எங்கள் தலைவரைப் பற்றியோ பேச துளியும் அருகதை இல்லை.
(பி.கு) அரசியல் வியாபாரியாக இருந்த தாங்கள் தியாகியாக துணை புரிந்த உலக புகழ் பெற்ற அந்த பேன்ட் தற்போது அண்ணா அறிவாலய வளாகத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதா? இல்லை பாதுகாக்கும் பொருட்டு அருங்காட்சியகத்தில் இருக்கிறதா? என்று அதில் கேட்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்