எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அருகதை இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி.. அமைச்சர் சேகர்பாபு

Meenakshi
Oct 17, 2024,12:49 PM IST

சென்னை: மழைக்காலத்தில் நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு மட்டும் இன்றி ஆறுதல் சொல்லக்கூட எங்கும் செல்லவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அருகதை இல்லாதவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வந்தது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும் அதிதீவிர கனமழை பெய்யும் என்று வானிலை மையம் ரெட் ஆலர்ட் விடுத்திருந்தது. ஒரு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், ஒரு சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிக கனமழை பொழிந்தது. இருப்பினும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது. தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக தமிழக அரசை விமர்சித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக மக்களை ஏமாற்றும் நாடகத்தை நடத்துவதைக் கைவிட்டுவிட்டு, போர்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.




இதுகுறித்து, மழை பாதித்த பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில்,  தாழ்வான பகுதிகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் 17 செ.மீ அளவுக்கு மழை பெய்தாலும் தண்ணீர் வடிந்துவிட்டது. மின்சாரம், பால் மற்றும் உணவு விநியோகத்தி்ல் எந்தத் தடையும் இல்லை. எல்லையில் ராணுவ வீரர்கள் மக்களை காப்பதற்கு போராடுகிறார்களோ அதேபோல முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு பகல் பாராமல் களத்தில் மக்களை காக்க போராடி வருகிறார்.


சென்னையில் மழை தொடங்கி 3 நாட்கள் ஆகிவிட்டன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கால்கள் எங்காவது தரையில் பட்டுள்ளதா? மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு அதிமுக நிர்வாகிகள் நேரில் வந்தார்களா? மழை பாதித்த ஏதாவது ஒரு பகுதிக்குச் சென்று ரெட்டியோ, பாலோ, பிஸ்கட்டோ வழங்கினார்களா? தற்போதையை முதல்வர், எதிர்கட்சித் தலைவராக இருந்த போது நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்.எதிர்க்கட்சித் தலைவர் என்று சொல்லிக் கொள்ளவே அருகதை இல்லாதவர் இபிஎஸ்.


சென்னையில் அதிமுக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சியினர் பலர் இருந்தும் மழைக்காலத்தில் நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு மட்டும் இன்றி ஆறுதல் சொல்லக்கூட எங்கும் செல்லவில்லை என்று கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்