அதிமுகவின் மனிதச் சங்கிலி போராட்டமே.. தமிழக சட்டம் ஒழுங்குக்கு சான்று.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு!

Manjula Devi
Oct 08, 2024,04:30 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் சொத்துவரி, மின்கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதால்தான் இந்தப் போராட்டம் நடத்த முடிந்தது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கருத்து தெரிவித்துள்ளார்.


இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமான படை சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் இதனைக் காண லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் ஒன்று கூடினர். அப்போது மூச்சு திணறல் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்தனர். 240 பேர் மயக்கமுற்றினர். இந்த நிகழ்வை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளும் கட்சியினர் முறையாக திட்டமிடாத காரணத்தினாலேயே இது போன்ற உயிரிழப்பு ஏற்பட்டது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என கடுமையாக குற்றம் சாடியிருந்தார்.




இதற்கிடையே சொத்து வரி மற்றும் மின் கட்டண அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார் .


இந்த நிலையில் சொத்துவரி, மின்சார கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் விலை, உயர்வை கண்டித்து  இன்று அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் பழைய மாநகராட்சி அலுவலகம், காஞ்சிபுரம் காந்தி வீதி உள்ளிட்ட நான்கு இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.இதில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் வி.சோமசுந்தரம், மாநில அமைப்புச் செயலர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் காஞ்சிபுரம் நகராட்சி தலைவர் ஆர்.டி.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அதேபோல் சென்னை, திருச்சி, உளுந்தூர்பேட்டை, விருதுநகர், கோவை புதுக்கோட்டை, ஈரோடு தர்மபுரி, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டம் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டு, நீண்ட வரிசையாக நின்று பதாகைகளை ஏந்திய படி திமுகவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அப்போது பள்ளிக்கடனை ரத்து செய்ய வேண்டும், சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


அமைச்சர் பி.கே.சேகர்பாபு கருத்து


இதற்கிடையே, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் அதிமுக போராட்டம் குறித்தும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அதிமுக கூறுகிறதே என்றும்  கேட்டபோது அதற்கு அவர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் அதிமுகவினரால் மனிதச் சங்கிலி போராட்டமே நடத்த முடிந்திருக்கிறது என்று அதிரடியாக பதிலளித்தார்.


துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் டி சர்ட் குறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறிய கருத்து குறித்துக் கேட்டபோது, அவர் சுயமாக சம்பாதித்து சொந்தக் காசில் வாங்கிய சட்டையைப் போடுகிறார். அந்த சட்டையில் யாரையும் விமர்சிக்கும், திட்டும், இழிவுபடுத்தும் வாசகம் எதையும் அவர் இடம் பெறச் செய்யவில்லை. சொந்தக் காசில் வாங்கிப் போட்ட சட்டையை விமர்சிப்பது மடத்தனமாகும் என்று கூறினார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்