அடிக்கிற வெயிலுக்கு.. வாங்கிக்கை முடித்த கையோடு.. "நுங்க சாப்பிடுங்க பிரண்ட்ஸ்".. மா.சு தரும் ஐடியா

Su.tha Arivalagan
Apr 25, 2024,05:57 PM IST

சென்னை: அடிக்கிற வெயிலுக்கு இளநீர், மோர், நுங்கு என்று மக்கள் ஓடிக் கொண்டுள்ளனர். இதையே தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனும் வலியுறுத்தியுள்ளார்.


தமிழ்நாட்டில் வழக்கத்தை விட முன்கூட்டியே வெயில் காலம் ஆரம்பித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது. வெளியில் போகவே அச்சப்படும் அளவுக்கு வெயில் கடுமையாக இருக்கிறது. பல நாட்களாகவே பல ஊர்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் போய் விட்டது. பல ஊர்களில் சர்வ சாதாரணமாக 105 டிகிரிக்கு மேல்தான் வெயில் பதிவாகிறது.


இந்த நிலையில் மே மாதம் முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும்  கத்திரி வெயில் தொடங்கப் போகிறது. கிட்டத்தட்ட 20 நாட்கள் வரை இந்த வெயில் காலம் இருக்கும். இந்த சமயத்தில் வெயில் மிகக் கடுமையாக இருக்கும் என்பதால் மக்கள் இப்போதே மண்டையை பத்திரப்படுத்திக் கொள்வது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.




டயட்டிஷியன்களும், டாக்டர்களும் கூட மக்களுக்கு பல்வேறு டிப்ஸ்களைக் கொடுத்து வருகின்றனர். கடும் வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வதுதான் முக்கியம். குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும். அதிகம் வெளியில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே வெளியே போனாலும் போதிய தற்காப்புகளை கடைப்பிடிக்க வேண்டும். தவிக்காவிட்டாலும் கூட தண்ணீர் குடிப்பதை கடைப்பிடிக்க வேண்டும்.


அதிக அளவில் இளநீர், மோர், நுங்கு போன்றவற்றைக் குடிக்கலாம். இவை உடலுக்கு நல்லது. மேலும் ஐஸ்வாட்டர் போன்றவற்றைக் குடிப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக வெயிலில் போய் விட்டு வந்ததும் ஃபிரிட்ஜைத் திறந்து தண்ணீர், குளிர்பானம் போன்றவற்றைக் குடிக்காதீர்கள். அது தீங்கானது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.


இந்த நிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியனும் மக்களை கவனமாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார். தினசரி ஜாகிங் போவதை வழக்கமாக கொண்டவர் அவர். அப்படி காலையில் ஜாகிங் போய் விட்டு வழியில் நுங்கு விற்பதைப் பார்த்ததும் தனது சகாக்களோடு நின்று நுங்கு சாப்பிட்டு மகிழ்ந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், Ice Apple என்று அழைக்கப்படும் நுங்கு சாப்பிட்டுவிட்டு இளநீர் பருகினோம். வெப்ப அலை வீசுவதால் நீங்களும் இவைகளை பின்பற்றலாமே...( தேர்தல் நடத்தை விதிமுறைகள்) அமுலிலிருப்பதால்,இதை அமைச்சராக சொல்லவில்லை..சக மனிதனாக தான் சொல்கிறேன் என்று கூறியுள்ளார் மா.சுப்ரமணியன்.