மயங்கிக் கிடந்த  மனைவி.. கலங்கிப் போன கணவன்.. கை கொடுத்து உதவிய விஜயபாஸ்கர்

Su.tha Arivalagan
Jul 25, 2023,01:10 PM IST
- சகாயதேவி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சாலையில் மயங்கிக் கிடந்த மனைவியை தாங்கிப் பிடித்தபடி உதவிக்காக தவித்து நின்ற கூலித் தொழிலாளியைக் கண்ட முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தனது காரை நிறுத்தி அவர்களுக்கு உதவி செய்து அனுப்பி வைத்த செயல் பலரையும் நெகிழ வைத்தது.

கொரோனா காலத்தின்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர். அவரது செயல்பாடுகள் பலரது பாராட்டுக்களைப் பெற்றது. இந்த நிலையில் அவர் செய்த ஒரு உதவி பலரையும் நெகிழ வைத்துள்ளது.



ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து காரில் போய்க் கொண்டிருந்தார் விஜயபாஸ்கர். அப்போது விராலிமலை அருகே மாத்தூ���் என்ற இடத்தில் கார் போனபோது சாலையோரம் ஒரு நபர் மயங்கிய நிலையில் ஒரு பெண்ணை மடியில் கிடத்தியபடி தவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து காரை நிறுத்தக் கூறினார்.

காரை விட்டு இறங்கி அந்த நபரை நெருங்கி யார் என்னாச்சு என்று விசாரித்தபோது இருவரும் கூலித் தொழிலாளர்கள், கணவன் மனைவி என்று தெரிய வந்தது. திடீரென மனைவி  மயங்கி விழுந்து விட்டதாக அவர் கூறினார். இதையடுத்து தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்தார். பின்னர் காலை தேய்த்து முதலுதவி செய்தார். அதன் பின்னர் அந்தப் பெண் இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

அதைத் தொடர்ந்து அந்த இருவரும்  அங்கிருந்து பத்திரமாக கிளம்பிச் சென்றனர். கூலி வேலைக்காக திருச்சி போயிருந்த அவர்கள் வரும் வழியில் இப்படி ஆகி விட்டது தெரிய வந்தது. அமைச்சரின் செயல்பாடு அங்கிருந்தோரை நெகிழ வைத்தது.